றம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் இறுதி கிரியையில் உயிரிழந்தவின் மனைவியின் நிராகரிப்பையும் மீறி இராணுவத்தினர் செயற்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட கணவரின் இறுதிக் கிரியைகளுக்கு உதவ அழைக்கப்படாத இராணுவ குழுவொன்று வந்ததாகவும், தான் உதவி தேவையில்லை என கூறிய போதிலும் கூடாரம் அமைத்து உணவு கொண்டு வந்து தருவதாக கூறியதாக, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷனின் மனைவி சமன் குமாரி கேகாலை நீதவான் வாசனா நவரத்ன முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனது கணவர் இராணுவத்திலோ அல்லது பாதுகாப்புப் படையிலோ பணியாற்றவில்லை எனவும் இறுதிச் சடங்கிற்கு இராணுவத்தின் உதவி தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இராணுவ குழுவொன்று காலையிலேயே வீட்டிற்கு வந்ததாகவும், அகற்றி செல்லுமாறு கூறிய போதிலும் கூடாரம் இன்னமும் அங்கேயே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமன் குமாரியின் கண்ணீர் சாட்சி பின்வருமாறு.
“எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. எரிபொருள் நிரப்பப் போவதாக கணவர் கூறிவிட்டு சென்றார். அப்போது ஒருவர் எனக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு உங்கள் கணவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறினார்.
நான் கேகாலை மருத்துவமனைக்குச் சென்றேன். கணவரை மருத்துவமனை தள்ளுவண்டியில் பார்த்தேன். பின்னர் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன்.
நாங்கள் வீட்டில் இருந்தபோது, ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு இராணுவ ட்ரக் ஒன்று எங்கள் வீட்டுக்கு வந்தது. அங்கு சுமார் 20 பேர் இருந்தனர். அவர்களில் இரண்டு பேர் நட்சத்திர பதித்த ஆடை அணிந்த இரண்டு உயர் அதிகாரிகளாகும்.
அவர்கள் என்னிடம், “நாங்கள் உங்களுக்கு உதவ வந்தோம். நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம். ” என கூறி ஒரு கூடாரத்தைக் கொண்டு வந்து அடித்தார்கள். அவர்கள் எங்களுக்கு உணவும் பானமும் கொண்டு வந்தனர்.
எனது கணவர் இராணுவத்திலோ அல்லது பாதுகாப்புப் படையிலோ இல்லை, எனவே உங்கள் உதவி எனக்குத் தேவையில்லை என அவர்களிடம் கூறினேன். அவர்கள் சென்றுவிட்டனர். இன்று காலையும் அந்தக் குழு எங்கள் வீட்டுக்கு வந்தது. நான் அவர்களிடம், நீங்கள் இங்கு வர வேண்டிய அவசியமில்லை என கூறினேன். எனினும் இன்னமும் அந்த கூடாரம் அகற்றப்படவில்லை.
என் கணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது கடைசி மரணமாக இருக்கப்போவதில்லை. மேலும் பலரை சுட்டுக் கொன்று விடுவார்கள். எனவே என் கணவருக்கு நீதி வழங்குங்கள். அவர்கள் சீருடை மற்றும் நட்சத்திரங்களை அணிந்த கொலைகாரர்கள் ” என சமிந்த லக்ஷனின் மனைவி சமன் குமாரி மேலும் தெரிவித்துள்ளார்.