புதுடெல்லி: மக்கள் நலப்பணியாளர் தொடர்பான வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அதை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர், கடந்த 2011ம் ஆண்டு பணியிலிருந்து அப்போதைய அதிமுக அரசால் நீக்கப்பட்டனர். இதை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.7500 ஊதியம் வரும் வகையில் இவர்களுக்கு பணி வழங்கப்படும். மேலும், பணி நீக்கம் செய்யப்பட்ட அல்லது கடந்த பத்து ஆண்டுகளில் இறந்து போன மக்கள் நலப் பணியாளர்களின் சட்டப்படியான வாரிசுகளுக்கும் வேலை வழங்கப்படும்,’ என உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், இதற்கு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தின் தரப்பில் ஆஜரான ஹரிப்பிரியா, அனித்தா ஷினாய் ஆகியோர் வாதங்களை முன்வைக்க தயாராகினர். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘இந்த வழக்கில் மாநில அரசின் கொள்கை முடிவு பிரச்னையும், மக்கள் நலப்பணியாளர்களின் பிரச்னையும் உள்ளடங்கி இருக்கிறது. எனவே, இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்பதால், வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறோம். அதன் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்,’ என உத்தரவிட்டு, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.