அகமதாபாத்: குஜராத்தில் வட்கம் சட்டப் பேரவை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி. தலித் சமூக ஆர்வலரான இவர் காங்கிரஸ் ஆதரவாளர். பிரதமர் மோடியையும் பாஜகவையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், ஜிக்னேஷ் மேவானி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி குறித்து அவதூறாகவும் இரு மதப் பிரிவினரிடையே மத விரோதத்தைத் தூண்டும் வகையிலும் கருத்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அசாம் கோக்ரஜ்ஹார் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் அருப் குமார்டே அளித்த புகாரின் பேரில் அசாம் போலீஸார் கடந்த 19-ம் தேதி ஜிக்னேஷ் மேவானி மீது வழக்கு பதிவு செய்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் குஜராத் பனஸ்கந்தா மாவட்டம் பலன்பூர் என்ற இடத்தில் அரசு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த மேவானியை அசாம் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் விளக்கம்
நேற்று அவரை அசாமுக்கு கொண்டு சென்றனர். அசாம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏப்ரல் 18-ம் தேதியன்று ஆட்சேபகரமான கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட கருத்து தொடர்பான வழக்கில் ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார்.