மனைவி கர்ப்பம் தரிக்க, சிறையில் உள்ள கணவனுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜஸ்தான்
மாநிலத்தைச் சேர்ந்த ரேகா என்பவர், சந்ததி உரிமை (Right Of Progeny) அடிப்படையில், தனது கணவர் நந்த் லால் என்பவரை விடுவிக்கக் கோரி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற ஜோத்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் ஃபர்ஜந்த் அலி ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
நந்த் லாலின் மனைவி நிரபராதி. கணவனின் சிறைத் தண்டனையால், “திருமண வாழ்க்கையுடன் தொடர்புடைய அவரது பாலியல் மற்றும் உணர்ச்சித் தேவைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், ஒவ்வொரு வழக்கின் தனித்தன்மையான உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு உட்பட்டு, ஒரு கைதிக்கு சந்ததியைப் பெறுவதற்கான உரிமை உள்ளது. தண்டனை கைதியின் மனைவி, சந்ததியைப் பெறுவதற்கான உரிமையைப் பறிக்க முடியாது.
இந்த லிங்க்கை க்ளிக் செய்து அட்டகாசமான பரிசை வெல்லுங்கள்
சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர, எந்தவொரு நபரின் உயிரையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் பறிக்கக் கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது. அதன் வரம்பிற்குள் கைதிகளும் அடங்குவர். எனவே, மனைவி கர்ப்பம் தரிக்க நந்த் லாலுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பில்வாரா நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு நந்த் லாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. அவர் அஜ்மீர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 2021 ஆம் ஆண்டில் அவருக்கு 20 நாள் பரோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.