மாமல்லபுரத்தில், ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமி தினத்தன்று வன்னியர் சங்கம் சார்பில் ‘முழுநிலவு சித்திரை பெருவிழா’ நடப்பது வழக்கமாக இருந்துவந்தது. அந்த வகையில், 2012-ம் ஆண்டு நடைபெற்ற விழாவில், பா.ம.க-வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்துவந்த காடுவெட்டி குருவின் பேச்சு ஒரு தரப்பு மக்களுக்கு எதிராக இருந்தாக சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து, `2013-ம் ஆண்டு அந்த விழாவை நடத்தக்கூடாது’ என்று சட்டப்பூர்வமான எதிர்ப்புகள் வலுத்தன. பின்னா், சில கட்டுப்பாடுகளுடன் முழுநிலவு சித்திரை பெருவிழாவுக்கு அனுமதி அளித்திருந்தது காவல்துறை.
இந்த நிலையில், இந்த விழா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பா.ம.க-வினரும், வன்னியர் சங்கத்தினரும் அங்கு சென்றனர். அவ்வாறு விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வழியே பா.ம.க-வினர் சிலர் சென்றபோது, அவர்களுக்கும் குறிப்பிட்ட சமூக மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியுள்ளது.
இதில், பல குடிசைகளும், சில பேருந்து மற்றும் கார்களும் தீக்கிரையாகின. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார் மற்றும் லாரிகள் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. உயிர் சேதமும் ஏற்பட்டது. அதையடுத்து, சுமார் 200 பா.ம.க-வினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். விசாரணை அடிப்படையில் சுமார் 166 பேர் விடுவிக்கப்பட்டு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், மாணிக்கம், கலையரசன், குமரன் உள்ளிட்ட 34 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கலவரம் தொடர்பான வழக்கு, திண்டிவனம் நீதிமன்றத்தில் 2-வது கூடுதல் அமர்வு முன்பு கடந்த 8 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. அந்த 34 பேரில் இருந்து 14 பேர் விடுவிக்கப்பட்டு, 20 நபர்கள் மீது மட்டும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்து இன்று (22.04.2022) மதியம் தீர்ப்பு வழங்கப்பட்டது. மரக்காணம் கலவரம் வழக்கில், அரசு தரப்பில் இருந்து போதிய ஆதாரம் சமர்பிக்கப்படாததினால், குற்றம்சாட்டப்பட்ட பா.ம.க-வைச் சேர்ந்த 20 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சுதா தீர்ப்பளித்தார்.