ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ள மரியுபோல் நகரில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற ஐக்கிய நாடுகள் மன்றத்தால் மட்டுமே முடியும் என உக்ரேனிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்திருந்தார்.
ஆனால், தங்கள் இறுதி மூச்சு உள்ளவரையில் மரியுபோல் நகரம் உக்ரேன் கட்டுப்பாட்டில் தான் நீடிக்கும் என முக்கிய இராணுவ தலைவர் சூளுரைத்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது மரியுபோல் நகரில் சிக்கியுள்ள சுமார் 100,000 மக்களை மீட்க ஐ.நா. மன்றம் உதவ வேண்டும் என உக்ரேன் துணை பிரதமர் Iryna Vereshchuk வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மரியுபோல் நகரில் சிக்கியுள்ள மக்களை மீட்க ஐக்கிய நாடுகள் மன்றம் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும்,
அப்பாவி மக்களின் மரணத்தைத் தடுக்கும் திறனும் வலிமையும் கொண்ட ஒரே அமைப்பு அதுதான் எனவும்,
ஆனால், இதுவரை அந்த அமைப்பானது வெறும் பார்வையாளராகவே உள்ளது எனவும் உக்ரேன் துணை பிரதமர் Iryna Vereshchuk சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது மரியுபோல் நகரில் சிக்கியுள்ள மக்களை பத்திரமாக வெளியேற்ற ஐக்கிய நாடுகள் மன்றம் நடவடிக்கை முன்னெடுத்தால் மட்டுமே முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஐ.நா மன்றம் மற்றும் அதன் பொதுச்செயலாளர் António Guterres முழு ஈடுபாடுடன் களமிறங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்னும் பொறுமையாக இருக்க நேரமில்லை, அடுத்த சில தினங்களில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்டுள்ள Azovstal தொழிற்சாலையில் சிக்கியுள்ள உக்ரேனிய வீரர்கள் ஒருபோதும் சரணடையப் போவதில்லை எனவும், அவர்கள் தங்கள் நாட்டுக்காக இறுதி மூச்சுவரை போராடுவார்கள் எனவும் துணை பிரதமர் Iryna Vereshchuk ஆவேசமாக தெரிவித்துள்ளார்.