மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன – கடற்றொழில் அமைச்சர்

நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் அடைக்கப்பட்ட கூடுகளில் மீன் வளர்க்கும் முறைமையினை விருத்தி செய்து மொத்த மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புக்களையும் முதலீடுகளையும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய விவகாரங்களுக்கான பிரிவின் இலங்கை மற்றும் மாலைதீவு  பிரதிநிதி விம்லேந்திரா ஷாரனுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக பிரஸ்தாபிக்கும் வகையில் இன்று (22) கடற்றொழில்  அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
கடற்றொழிலாளர்கள் தற்போது எதிர்கொள்ளும் எரிபொருள்  பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிக்கு கடற்றொழில் அமைச்சரினால் தெளிவுபடுத்தப்பட்டது.
சீநோர் நிறுவனத்தின் ஊடாக படகு கட்டும் தொழிலை விஸ்தரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள், அறுவடை செய்யப்படுகின்ற மீன்கள் பழுதடையும் விகிதத்தினை குறைப்பதற்கான முயற்சிகள் போன்றவற்றிற்கு ஐக்கிய நாடுகள் சபை கட்டமைப்புக்களினால் வழங்கக் கூடிய ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், வடக்கில் உருவாக்கப்படுகின்ற கடலட்டைப் பண்ணைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.
நோர்வே போன்ற நாடுகளில் பின்பற்றுவதைப் போன்று குடா கடல் போன்ற பொருத்தமான நீர்நிலைகளில் கூடுகளை உருவாக்கி மீன் வளர்ப்புக்களை உருவாக்குவது மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு போன்றவற்றின் ஊடாக மீன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான தனது திட்டங்களையும் தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றுக்கான ஒத்துழைப்புக்களையும் மூதலீடுகளையும் பொருத்தமான தரப்புக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி, கடற்றொழில் அமைச்சின் எதிர்பார்ப்புக்கள் அடங்கிய திட்ட வரைவினை முன்னுரிமை அடிப்படையில் வழங்குமாறும், அவற்றை உரிய தரப்புக்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று  ஒத்துழைப்புக்களுக்கான தொடர்புகளை முடிந்தளவு ஏற்படுத்துவதாகவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.