புதுடெல்லி: டெல்லி ஜஹாங்கீர்புரியில், ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் தேவையா என டெல்லி மாநகராட்சியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர்.கவேய் ஆகியோர் அடங்கி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி மாநகராட்சி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தெருக்கள் மற்றும் நடைபாதையில் உள்ள கடைகள், மற்றும் பொருட்களை அகற்ற சட்டம் அனுமதித்துள்ளது என்றார்.
அப்போது நீதிபதி கவேய் குறுக்கிட்டு, மேசை, நாற்காலிகளை அகற்ற கூட உங்களுக்கு புல்டோசர் தேவையா என கேள்வி எழுப்பினார். கட்டிடங்களை இடிக்க புல்டோசர் தேவை என சொலிசிட்டர் ஜெனரல் பதில் அளித்தார்.
ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கான தடையை தொடர்வதற்கு துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான தடை தொடரும் என உத்தரவு பிறப்பித்த பிறகும், இடிக்கும் நடவடிக்கையை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
ஆக்கிரமிப்புக்கு எதிரான நட வடிக்கையை நிறுத்திவைக்கும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர் கவேய் ஆகியோர் அடங்கிய அமர்வு நீட்டித்தது. மேலும், ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
முன்னதாக, ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கான தடை உத்தரவு தொடர்வதாக நீதிமன்றம் அறிவித்த பின்பும் கட்டிட இடிப்பு நடவடிக்கைகள் தொடரப்பட்டதாக, மார்க்சிஸ்ட் தலைவர் பிருந்தா காரத் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மனு செய்தனர்.
ஜஹாங்கீர்புரியில் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்காமல், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும், அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே கோரிக்கை விடுத்தார்.
குறிப்பிட்ட சமுதாயத்தினரை குறிவைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது என்ற குற்றச்சாட்டை துஷார் மேத்தா மறுத்தார். மத்தியப்பிரதேசம் கர்கான் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட 88 பேர் இந்துக்கள் என்றும், 26 பேர் முஸ்லிம்கள் என்றும் துஷார் மேத்தா பதில் அளித்தார்.