கோக்ராஜ்ஹார்: குஜராத்தின் பனாஸ்கந்தாவில் உள்ள வத்காம் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி. இவர் பிரதமர் மோடியை விமர்சித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்தார். மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை பிரதமர் மோடி கடவுளாக கருதுவதாக டிவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார். அசாம் பாஜ நிர்வாகி அங்குள்ள காவல்நிலையத்தில் அளித்த புகாரில், மேவானி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு அவரை கைது செய்தனர். நேற்று காலை அங்கிருந்து விமானம் மூலமாக கவுகாத்தி அழைத்து சென்ற போலீசார், அங்கிருந்து சாலை மார்க்கமாக கோக்ரஜ்ஹார் அழைத்து சென்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டரில், ‘மோடி ஜி… அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலமாக உங்களுக்கு எதிரான எதிர்ப்புக்களை நசுக்க முயற்சிக்கலாம். ஆனால், உண்மையை ஒருபோதும் சிறையில் அடைக்க முடியாது,’ என்று குறிப்பிட்டுள்ளார்.