சென்னை: சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறைமானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏ-க்களின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்து மாற்றுத் திறனாளிகள் அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசியதாவது:
மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 24 பள்ளிகள் மற்றும் நிறுவனங்களின் கட்டிடங்கள் ரூ.2 கோடிசெலவில் மறுசீரமைப்பு செய்யப்படும்.
தென் மாவட்டங்களில் செவித்திறன் குறைபாடு உடைய 60 மாணவர்கள் உயர்கல்வி பெற வசதியாக, கணினி அறிவியல், வணிகவியல் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் எளிதில் சேவையைப் பெறுவதற்காக, கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் ரூ.1.51 கோடியில் அமைக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சுயதொழில் கடனுதவித் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் ரூ.25 ஆயிரம் தொகை, அறிவுசார் குறைபாடு உடையோர், புறஉலக சிந்தனையற்றோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் நீட்டித்து வழங்கப்படும். மொத்தம் 400 பேர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.5 கோடியில் செயல்படுத்தப்படும்.
முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்கட்டமாக திருப்பூர், கோவை,திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூ.1 கோடியில் 3 சிறப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் இல்லங்கள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மானியம் ரூ.900-லிருந்து, ரூ.1,200-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
பொதுக் கட்டிடங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில், தடைகளற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள சிறந்தஅரசு நிறுவனம் மற்றும் தனியார்நிறுவனத்துக்கு ரூ.1.60 கோடியில் இரு மாநில விருதுகள் வழங்கப்படும்.
அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கும் வகையில், வாடகைமற்றும் முன்தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரங்களில் தள்ளுவண்டிக் கடை நடத்த மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
சைகை மொழிபெயர்ப்பாளர் வசதி
அனைத்து மாவட்ட ஆட்சியர்அலுவலகங்களிலும், கூட்டம் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கும் செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பயன்பெறும் வகையில் சைகை மொழிபெயர்ப்பாளர் வசதி செய்துதரப்படும்.
அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீதஇடஒதுக்கீட்டை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக, உரிய பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அவர்களைப் பணி நியமனம் செய்வதைக் கண்காணிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
அறிவுசார் குறைபாடு உடையோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக திருநெல்வேலி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி மாவட்டங்களில், தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் ரூ.91 லட்சம் செலவில் இல்லங்கள் அமைக்கப்படும். உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் பயன்பெறும் மாற்றுத் திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் வயது வரம்பு 50-லிருந்து 40-ஆக குறைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
குழந்தை பராமரிப்பு விடுப்பு
இதேபோல, சமூக நலம், மகளிர் உரிமைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, ‘‘வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளுக்கு அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் ரூ.11 கோடியில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படும்.
மாற்று கருவறை தாய் (வாடகை தாய்) மூலம் குழந்தைகள் பெற்று பராமரிக்கும் அரசு பெண் ஊழியர்கள், ஆசிரியைகளுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும்’’ என்றார்.