புதுடெல்லி: அது அவர்களுக்கு வழக்கமான வியாபாரம் என்ற கருத்தை மறுப்பதாகவும், கரோனா தொற்று நம்மைப் பின்தொடரவில்லை என்பதால் ஒருவரின் உயிருக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் அஸ்ட்ரா ஜென்கா கோவிட் தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்குகிறது. இந்தியாவில் ஏராளமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதால் தற்போது ஊசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தடுப்பூசி மருந்துகள் பயன்பாடு குறைந்து, தயாரிப்பும் குறைக்கப்பட்டுள்ளது.
பணம் சம்பாதிப்பது நோக்கமல்ல
இந்த நிலையில் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தொற்றுநோயின் முதல் இரண்டு அலைகளில் மக்கள் அனுபவித்த வலிகளை மீண்டும் பார்க்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தடுப்பூசி இடைவெளியை தற்போதைய ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களுக்கு குறைக்க வேண்டும். மக்கள் நலன் கருதி இதனை நான் தொடர்ந்து கூறி வருகிறேன். நான் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. ஏற்கெனவே அது என்னிடம் போதுமான அளவு உள்ளது.
வீணாவதை தவிர்க்க நான் கரோனா தடுப்பூசிகளையும் இலவசமாகவும் வழங்கியுள்ளேன். எனது நோக்கம் பணமாக இருந்தால் நான் அவ்வாறு செய்திருக்க மாட்டேன். எனது கருத்து என்னவெனில், வயது வந்தவராக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி, ஒரு நபரின் உயிருக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது.
எனவே இரண்டாவது அலையின் போது நாம் செய்தது போல் சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பது காலத்தின் தேவையாகும். பூஸ்டர் டோஸ் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில் நாம் வேகமாக செயல்பட வேண்டும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க வேண்டிய முக்கிய நபர்கள், சரியான நேரத்தில் சந்திக்க வேண்டிய குழுக்கள் இனி எந்த அவசரமும் இல்லை என்று எண்ணுவதாக தோன்றுகிறது.
அவர்களுக்கு இது வழக்கம் போல் வியாபாரம் என்று அவர்கள் கருதலாம். இவ்வளவு தூரம் எங்களை இங்கு கொண்டு வந்த வேகம் தற்போது குறைந்து விட்டது. 2021 டிசம்பர் 31 முதல் எங்கள் நிறுவனம் உற்பத்தியை நிறுத்தி விட்டது.
ஒரு மருந்தின் விலையை ரூ.600 லிருந்து ரூ.225 ஆக பெருமளவில் குறைத்த பிறகும் மக்கள் தடுப்பூசிகளை குறைவாக எடுத்துக்கொள்வதற்கு முக்கிய காரணம் அதிகரித்து வரும் சோர்வே. நாங்களும் தற்போது 20 கோடி குப்பிகளை வைத்துள்ளோம்.
பூஸ்டர் டோஸ்
பூஸ்டர் டோஸ்கள் செலுத்துவதற்கு மக்கள் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் உள்நாட்டிலும் வெளியிலும் பயணம் செய்ய வேண்டியிருப்பதாலும், பல நாடுகள் பயணத்திற்கு பூஸ்டர் டோஸ்களை கட்டாயமாக்கியுள்ளதாலும் இது தேவைப்படுகிறது .
ஒன்பது மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை இரண்டு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டியது மிகவும் அவசியம். தடுப்பூசி இடைவெளியை அதிகரிக்கும் போது ஆன்டிபாடி குறைகிறது என்பதை உலக அளவிலான ஆய்வுகள் காட்டுகிறன. 7-11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அரசின் ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
கோவோவாக்ஸ் தடுப்பூசி நீண்ட காலத்திற்கு முன்பே ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற்ற போதிலும் இது இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் இது ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் நீண்டகாலமாக விநியோகத்தில் உள்ளது. அரசு ஒட்டுமொத்தமாக, சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தாலும், அவசர உணர்வை தொலைந்துவிட்டதாகத் தெரிகிறது
இவ்வாறு ஆதார் பூனாவாலா கூறினார்.