கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மின்வெட்டு நிலவுவதால், மக்கள் தொடர் குற்றச்சாட்டை வைக்கின்றனர். மின்வெட்டு எங்கு அதிகம் நிலவுகிறது? என்பதை பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கணிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டால் இந்தியாவில் 12 மாநிலங்களில் மின்சாரத் தட்டுப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடும் அடங்கும் என்பதே கவலைக்குரிய உண்மை. அண்மைக் காலமாக தமிழகத்தில் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டு மக்களை புழுக்கத்தில் தள்ளி இருக்கிறது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள முள்ளிப்பள்ளம், தென்கரை, மன்னாடிமங்கலம், குருவித்துறை, மேலக்கால், திருவேடகம், ராயபுரம், திருப்பரங்குன்றம், நிலையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வெட்டு நீடிக்கிறது. கரூர் மாவட்டத்தில் மாநகராட்சியை பகுதியை தவிர மற்ற கிராமப் புறங்களில் அய்யர்மலை, மாயனூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இரண்டாவது நாளாக மின்வெட்டு ஏற்பட்டதால் இரவு நேரத்தில் புழுக்கம் ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கோவை மாவட்டத்தின் கோவில்பாளையம், குரும்பபாளையம், பெத்தநாயக்கன்பாளையம், கள்ளிபாளையம் உள்ளிட்ட கோவை புறநகர் பகுதிகளில் இரவில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம், பாலக்கோடு, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கட சமுத்திரம், பூனையானூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடருவதாக புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மூன்று அலகுகள் இயங்கவில்லை. எனவே, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடும் மின்வெட்டை சந்திக்கின்றன.
கடந்த சில தினங்களாக நிலவும் இந்த மின்வெட்டு பொதுமக்களை புழுக்கத்திலும், கொசுக்கடியிலும் தள்ளியுள்ளது. மின்வெட்டால் மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில், மக்களை நேரடியாக பாதிக்கும் மின்வெட்டு பிரச்சினை மற்றும் நிலக்கரி பற்றாக்குறையை தமிழக அரசு எப்படி சமாளிக்க போகிறது என்பதை அனைத்து தரப்பினரும் உற்று கவனித்து வருகின்றனர்.
இதற்கிடையில், மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி ஒதுக்குவதால், மின்வெட்டைத் தவிர்க்க அடுத்த 2 மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமீப நாட்களாக நிலவிவரும் மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கோடைக்காலத்தில் மின்சார தேவை அதிகரித்துள்ளதால், நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
வெளிமாநிலத்தில் இருந்து மின்சாரத்தை கொண்டுவர கடந்த ஆட்சியில் மின்பாதை அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மின்வெட்டு காரணமாக விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய எடப்பாடி பழனிசாமி, மின்வெட்டை சரிசெய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்பற்றாக்குறையை சமாளிக்க 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாகத் தெரிவித்தார். விலை கடுமையாக உயர்ந்த போதிலும் கடந்த ஓராண்டில் ஒரு டன் நிலக்கரி கூட இறக்குமதி செய்யப்படவில்லை என்றும், தமிழகத்தில் ஒருநாள் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
தமிழகத்தில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறையால் மின்தடை என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் தமிழகத்தில் போதுமான நிலக்கரி இல்லாதபோதும், தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் செந்தில்பாலாஜி குறிப்பிட்டார். மின்உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மின்வெட்டால் என்னென்ன பாதிப்புகளை மக்கள் சந்திக்கிறார்கள் என்பது குறித்து விரிவாக புதிய தலைமுறையின் நியூஸ் 360 டிகிரி வீடியோவில் காணலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM