விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' வெளியீடு மீண்டும் தள்ளிவைப்பு – என்னதான் பிரச்னை?

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாமனிதன்’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளி சென்றுள்ளது. அதற்கான காரணம் என்ன?

நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய குருநாதர் சீனு ராமசாமி இயக்கத்தில் 4-வது முறையாக நடித்திருக்கும் திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா தயாரித்தார். அத்துடன் தன்னுடைய தந்தை இளையராஜாவுடன் சேர்ந்து முதன் முறையாக இசையமைத்தார்.

‘மாமனிதன்’ திரைப்படம் 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.  ஆனால் விஜய் சேதுபதி தன்னுடைய மற்ற படங்களில் நடிக்க வேண்டியதால் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை 2018 டிசம்பர் மாதம்  தொடங்கினர். மதுரை, கேரளா, வாரணாசி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது. 60 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்தார் சீனு ராமசாமி.

image

மாமனிதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலையையும் முடித்து கொடுத்தார். இதனால் 2019 ஆம் ஆண்டே மாமனிதன் வெளியீட்டுக்கு தயாரானது. ஆனால் தயாரிப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு நிதி நெருக்கடி சிக்கல் இருந்தது எனக் கூறப்பட்டது. அதிலும் வேறு ஒரு தயாரிப்பாளரின் கடனால் பிரச்னை எனவும் சினிமா துறையில் கூறினர்.  இதனால் நிதி சிக்கலை சரி செய்தால்தான் மாமனிதன் வெளியாகும் என்ற சூழல் ஏற்பட்டது.

தயாரிப்பாளரின்  பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என முயற்சித்தனர்.  அதற்காக பல தேதிகளை இறுதி செய்து படத்தை வெளியிட வேலையைத் தொடங்கினர்.  இருந்தாலும் மாமனிதன் வெளியாவதற்கு சூழல் அமையவில்லை. மூன்றாண்டுகளாக முயற்சித்தும் எந்தப் பலனும் இல்லாத நிலையில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரேஷ் தன்னுடைய ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலமாக மாமனிதன் படத்தை வெளியிட முன்வந்தார்.  இதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தானது.  அத்துடன் மே 20ஆம் தேதி படத்தை வெளியிடவும் திட்டமிட்டு வேலையைத் தொடங்கினர்.

‘மாமனிதன்’ திரைப்படம் மே 20ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் விஜய் சேதுபதியின் மற்றொரு படமான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது.  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த படம் 20 நாட்களை கடந்து ஓடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மே 20ஆம் தேதி ‘மாமனிதன்’ வெளியானால் இரண்டு விஜய் சேதுபதி திரைப்படங்கள் திரையரங்கில் இருக்கும். அது ஒரு படத்துக்கு சிக்கல் ஏற்படும். அந்த சூழல் இரண்டு  தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை கொடுக்கும் என திரைத்துறையில் கூறுகின்றனர்.

image

“காத்துவாக்குல இரண்டு காதல்” வெளியீடு ஒருபுறம் இருந்தாலும்,  இன்னொரு புறம் அடுத்தடுத்த வாரங்களில் முக்கிய திரைப்படங்கள் வெளியாகின்றன.  குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ மே 13ஆம் தேதி வெளியாகிறது.  இந்த திரைப்படத்திற்கு அதிக அளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்படும். ஏற்கனவே கே.ஜி.எஃப்-2,   பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிட்ட அளவிலான திரையரங்குகளை தன்வசம் வைத்திருக்கும். அதேபோல் மே 20ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வெளியாகிறது. அந்தப் படத்திற்கும் சுமார் 250 திரையரங்குகள் ஒதுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மாமனிதன் திரைப்படத்திற்கு 150க்கும் குறைவான திரையரங்குகளில் கிடைக்கும் என்ற சூழல் எழுந்துள்ளது. இதனால் தங்களுக்கு 400 திரையரங்குகளாவது வேண்டும் என ஆர்.கே.சுரேஷ் கூறுகிறார்.  

இந்த பிரச்னைகள் ஒருபுறமிருக்க,  தயாரிப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் நிதி சிக்கலும் படத்தின் வெளியீட்டுக்கு மீண்டும் தடை யாக வந்துள்ளது என கூறுகின்றனர்.  யுவன் சங்கர் ராஜா வழங்கவேண்டிய கடன் தொகையை வழங்கினால்தான் இந்த படத்தை வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் சம்மந்தப்பட்டவர்களால் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதில் முடிவு ஏற்படவில்லை.  இதனால்தான் மாமனிதன் திரைப்படத்தை மே 20ஆம் தேதியில் இருந்து ஜூன் 24-ஆம் தேதிக்கு வெளியீட்டை  மாற்றியுள்ளனர் என திரைத்துறையில் கூறுகின்றனர்.

இதனால் மூன்று ஆண்டுகளாக வெளியீட்டுக்கு காத்திருக்கும் மாமனிதன் மேலும் ஒரு மாதம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தமிழகத்தில் சாதனைப் படைத்த கே.ஜி.எஃப்-2 முதல் வாரத்தின் வசூல் எவ்வளவு?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.