விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவர், சுமார் 500 க்கும் மேற்பட்ட ஆடுகளை தொழில்முறை ரீதியாக கொட்டகை அமைத்து வளர்த்து வருகிறார். இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் கருமல் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான கணேசன் (28) மற்றும் விக்னேஷ் (25) ஆகியோர் கூலி அடிப்படையில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாத்தூர் அருகிலுள்ள உப்பத்தூர் பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட ஆடுகளை சகோதரர்கள் இருவரும் கிடைப்போட்டு மேய்ச்சல் செய்து வந்தனர்.
இந்நிலையில் அங்கிருந்து ஏழாயிரம்பண்ணை செல்வதற்காக நள்ளிரவு நேரத்தில் 350 ஆடுகளை ஓட்டிச் சென்றபோது உப்பத்தூர் விலக்கில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது மதுரையிலிருந்து கோவில்பட்டி நோக்கிச் சென்ற வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே 38 ஆடுகள் பலியாயின. மேலும் 12 ஆடுகள் காயம் அடைந்தது.
சம்பவம் நடந்த நேரம் நள்ளிரவு என்பதாலும் அப்பகுதியில் வெளிச்சம் இல்லாததாலும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தின் அடையாளம் தெரியவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் போலீஸார் இறந்த ஆடுகளை அப்புறப்படுத்தி வாகனப் போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தினர்.
தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மற்றும் சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக் காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், சம்பவம் நடைபெற்ற அந்நேரத்தில் கடலூரில் இருந்து கன்னியாகுமரிக்கு மீன்லோடு ஏற்றச்சென்ற சரக்கு வாகனம் ஆடுகள் மீது மோதியிருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து விபத்துக்குறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் பதிவான வீடியோவை ஆதாரமாகக்கொண்டு விபத்து ஏற்படுத்திய லாரியை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தில் பலியானவைகளில் ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை இருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது. இதனால், ஆடு உரிமையாளருக்கு சுமார் 6 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கால்நடைகள் நெடுஞ்சாலையின் வழியே கடப்பது குறித்து விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ரவிச்சந்திரனை சந்தித்து பேசினோம்.
“பொதுவாக ஆடு வளர்ப்பவர்கள் இரவு நேரத்தில் நெடுஞ்சாலைகளின் வழியே ஆடுகளை ஓட்டிச் செல்வது மிகவும் ஆபத்தானது. பகல் நேரத்திலேயே விபத்துகள் நிகழும்போது இரவு நேரம் சரியான தேர்வு அல்ல. எந்த நேரத்தில் சாலையை நாம் கடந்தாலும் எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்துகளில் பெரும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இந்த விபத்தில் கூட 300க்கும் மேற்பட்ட ஆடுகள் ஒரே சமயத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்டுள்ளன. சாதாரணமாக பகல் பொழுதில், 300-க்கும் மேற்பட்ட ஆடுகள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க குறைந்தப்பட்சம் 5 நிமிடங்கள் ஆகும். எனவே இரவு நேரங்களில் சாலையை கடக்க 5 நிமிடத்திற்கு மேல் ஆகிருக்கலாம். இதற்கு ஆட்களைக் கொண்டு உரிய ஏற்பாட்டுடன் சாலையை கடந்திருக்க வேண்டும்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுவாக கால்நடைகளுக்கு இன்ஷூரன்ஸ் வழங்கும் திட்டத்தை தேசிய கால்நடை இயக்ககம் மூலம் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வெள்ளாடு, செம்மறியாடு, பசு, எருமை இனங்களை இன்ஷூரன்ஸ் செய்து கொள்ளலாம். இன்ஷூரன்ஸ் திட்டத்தில், 10 ஆடுகள் அல்லது 10 மாடுகள் ஒரு யூனிட் என கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி ஒரு நபருக்கு 5 யூனிட்டுகள் வரை இன்ஷூரன்ஸ் செய்து கொள்ளலாம். உதாரணத்துக்கு ஒரு மாட்டை 35 ஆயிரத்துக்கு காப்பீடு செய்ய விரும்பினால், இன்ஷூரன்ஸ்தாரர் காப்பீட்டுத்தொகையிலிருந்து 1.7% பிரீமியம் தொகை செலுத்தவேண்டும். அதன்படி வருடத்திற்கு ரூ.595 மட்டும் பிரீமியமாக செலுத்தினால் போதும்.
இதிலும், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பிரீமியத்தில் 50 சதவிகித மானியத்துடன் 297.50 ரூபாயும், வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பட்டியல் வகுப்பினர் 70 சதவிகித மானியத்துடன் 198 ரூபாயும் பிரீமியம் செலுத்தினால் போதும்.
விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 3000 மாடுகளுக்கு இன்ஷூரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020-21 நிதியாண்டாடோடு முடிவுபெற்றுவிட்டது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பு வரும் ஜூன் மாதம் வெளியாகலாம். அரசு தவிர பல தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் கால்நடைகளுக்கு காப்பீடு திட்டங்களை வழங்குகின்றன. அதில் சேர்ந்தும் பயன்பெறலாம். குறிப்பாக நெடுஞ்சாலையோரங்களில் மாடுகள், ஆடுகளை ஓட்டி செல்பவர்கள், மேய்ப்பவர்கள் கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது” என்றார்.