விருத்தாசலம்: தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த நாஞ்சில் சம்பத் காரை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
விருத்தாசலத்தில் உள்ள ஜெயப்ரியா மேல்நிலைப் பள்ளியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெறியாளராக பங்கேற்க நாஞ்சில் சம்பத் காரில் விருத்தாசலம் வந்தார். அவர் வருவதை அறிந்த பாஜகவினர், அதன் மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், வேட்டக்குடி எழிலரசன், செல்வராஜ் உட்பட் சுமார் 50 பேர் பள்ளி முன்பு திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை நாஞ்சில் சம்பத் ஒருமையில் தரக்குறைவாக பேசியதாகவும், அதைக் கண்டித்து அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து கோஷமிட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தபோது, நாஞ்சில் சம்பத் பயணித்த காரும் அங்கு வரவே, பாஜகவினர் அவரது காரை முற்றுகையிட்டு உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். போலீஸார் அவர்களை அகற்ற முயன்றபோது, போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் விருத்தாசலம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் காவலர் ஒருவர் மற்றும் இரு பாஜக நிர்வாகிகள் லேசான காயமடைந்தனர்.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அந்தோணிராஜ், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிசெய்து, பாஜகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி கடலூர் மாவட்டத் தலைவர் மணிகண்டன் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் நாஞ்சில் சம்பத் பயணித்த கார் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதோடு, காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மீதும் அவர் கார் மோதியது நாஞ்சில் சம்பத்தை மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.