சில நேரங்களில் சாதாரண பகைக் கூட கொலையில் முடிந்துவிடுகிறது. மும்பையில் அது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அந்த வகையில், வீட்டின் முன் எச்சில் துப்பிய சிறுவனை உறவினர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
மும்பை தானேவில் உள்ள கல்வாவில் வசிப்பவர் தஸ்ரத் காக்டே (28). இவரது வீட்டிற்கு அருகில் அவரின் உறவினர் தன் குடும்பத்தோடு வசித்து வந்திருக்கிறார். அவரின் மகன் ருபேஷ்(13) என்ற சிறுவன், கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் உறவினர் தஸ்ரத் வீட்டின் முன் எச்சில் துப்பியிருக்கிறார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பழிவாங்கவேண்டும் என்று தஸ்ரத் முடிவு செய்தார். அதையடுத்து, நேற்று முன் தினம் தஸ்ரத் ருபேஷிடம், `அருகில் விழா நடைபெறுகிறது அங்கு சென்று வரலாம், வா..!’ என்று கூறி ருபேஷை அழைத்து சென்றார். சிறுவனும் அவரை நம்பி அவருடன் சென்றார். கல்வாவில் இருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் மும்ப்ரா என்ற இடத்திற்கு சிறுவனை அழைத்து சென்ற தஸ்ரத், அங்கிருந்த கழிவறை ஒன்றின் முதல் மாடிக்கு ருபேஷை அழைத்து சென்றார். பின்னர், அங்கு வைத்து ருபேஷை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு வந்துவிட்டார்.
வீட்டுக்கு வந்த தஸ்ரத்திடம் ருபேஷ் எங்கே என்று அவர் உறவினர்கள் கேட்டதற்கு, விளையாடிக்கொண்டிருப்பதாகவும், தான் செலவுக்கு 50 ரூபாய் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் இரவான பிறகும் ருபேஷ் வீட்டிற்கு வரவில்லை. இதனால் ருபேஷ் பெற்றோர் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, சிறுவனின் உறவினரைக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷெக்கே கூறுகையில், “தஸ்ரத்திடம் விசாரித்தபோது ருபேஷுக்கு 50 ரூபாய் கொடுத்து ஆடை வாங்கி வர வியாபாரி ஒருவரிடம் அனுப்பியதாகத் தெரிவித்தார். தஸ்ரத் தெரிவித்த வியாபாரியிடம் விசாரித்தபோது ருபேஷ் அங்கு வரவில்லை என்று தெரியவந்தது. அதனால், தஸ்ரத் மீது சந்தேகம் எழுந்தது. அதையடுத்து, அவரிடம் மீண்டும் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.