ஐதராபாத்: ‘ஸ்வைப்’ வசதி, ரகசிய ‘ஐடி’ வசதிகள் மூலம் ‘ஓகே மன்மதன்’ டேட்டிங் ஆப்ஸ் என்ற ஆப்சை பயன்படுத்தி விபசாரம் நடத்திய கும்பலை தெலங்கானா போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழும் ‘லிவிங் டு கெதர்’ என்கிற மேற்கத்திய கலாசாரம் இன்றைய இளம் தலைமுறையினர் இடையேயும் இருக்கிறது. இதுபோன்ற உறவுகளுக்குப் பெரும்பாலும் பாதை அமைத்துக் கொடுக்கின்றன ‘டேட்டிங்’ செயலிகள். முன்பைவிட ‘டேட்டிங்’ செயலிகளின் பயன்பாடு அதிகரித்திருப்பதன் மூலம் அவற்றின் மீதான மோகத்தை அறிய முடிகிறது. இன்னொரு புறம் டேட்டிங் செயலிகள் புற்றீசல் போலப் பெருகிவரும் நிலையில், அவற்றின் மூலம் உறவை வளர்த்து ஏமாற்றப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் ‘ஓகே மன்மதன்’ என்ற டேட்டிங் ஆப்சை செக்ஸ் மோசடி கும்பல் ஒன்று உருவாக்கி உள்ளது. இதன் அமைப்பாளர்கள், வாடிக்கையாளர்களுக்கும், செக்ஸ் தொழிலில் ஈடுபடும் விபசார கும்பலுக்கும் இடையேயான தொடர்புக்காக இந்த டேட்டிங் ஆப்சை உருவாக்கி உள்ளனர். இந்த டேட்டிங் ஆப்சை பயன்படுத்தி விபசார தொழில் அமோகமாக ஆங்காங்கே நடைபெற்று வந்தது. ஐதராபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக நரசிங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்த போலீசார் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை கையும் களவுளாக கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஓகே மன்மதன்’ என்ற டேட்டிங் ஆப்ஸ் மூலம், பாலியல் தொழிலில் ஈடுபடும் இளம்பெண்கள் குறித்த புகைப்படங்களை வெளியிடுகின்றனர். அந்த ஆப்சை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்வோர், தங்களுக்கு விருப்பமான பெண்களை தேர்வு செய்து கொள்ள முடியும். எந்த இடம், நேரம் என்பதை அவர்களே அந்த ஆப்ஸ் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் உரிய கட்டணத்தை ‘ஸ்வைப்’ செய்து கொள்ள முடியும். அந்த ஆப்ஸ் மூலம் ரகசிய ஐடி கொடுக்கப்படும். அந்த ஐடியை வாடிக்கையாளர் கொடுத்தால்தான், சம்பந்தப்பட்ட பெண் பாலியல் தொழிலாளி, தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள அனுமதிப்பார். பாலியல் தொழிலானது தற்போது ஹைடெக்காக மாறிவிட்டது. கைது செய்யப்பட்டவர்களில் உகாண்டா நாட்டை சேர்ந்த 4 பேரும் அடங்குவர். அவர்களின் விசா காலம் காலாவதியாகிவிட்ட நிலையில், தற்போது சிக்கியுள்ளனர்’ என்றனர்.