புதுடில்லி,-‘குவாட் தடுப்பூசி கூட்டணி’ வாயிலாக, இரண்டு லட்சம், ‘கோவோவாக்ஸ்’ தடுப்பூசிகளை, மத்திய அரசு தாய்லாந்துக்கு வழங்கி உள்ளது
.கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளில், மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.இந்நிலையில், தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு வினியோகிக்க, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும், ‘குவாட்’ அமைப்பு, கடந்த ஆண்டு குவாட் தடுப்பூசி கூட்டணியை துவக்கியது.
இந்த கூட்டணி வாயிலாக, மத்திய அரசு இரண்டு லட்சம் தடுப்பூசிகளை, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு, நேற்று வழங்கி உதவி செய்துள்ளது.இது குறித்து, மத்திய சுகாதாரத் துறைஅமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவோவாக்ஸ் தடுப்பூசியின் இரண்டு லட்சம் ‘டோஸ்’கள், தாய்லாந்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கான தாய்லாந்து துாதர் சுசித்ரா துரை, அந்நாட்டின் துணை பிரதமர் அனுடின் சார்ன்விரகுலை, தலைநகர் பாங்காக்கில்சந்தித்து, தடுப்பூசிகளை ஒப்படைத்தார்.அப்போது, ஆஸ்திரேலிய துாதர் அல்லன் மெக்கின்னன், ஜப்பான் துாதர் நஷிடா கஜுயா, அமெரிக்க துணை துாதர் ஜேம்ஸ் வேமன் ஆகியோரும் உடன் இருந்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குவாட் தடுப்பூசி கூட்டணி வாயிலாக, 12ம் தேதி, முதன் முறையாக, தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவுக்கு, மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Advertisement