வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: 2050ல் இந்திய பொருளாதாரம் சுமார் 25 லட்சம் கோடி டாலர் அளவை எட்டும், அப்போது அனைத்து வடிவிலான வறுமையும் ஒழிந்திருக்கும் என தொழிலதிபர் கெளதம் அதானி தெரிவித்தார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் இந்திய பொருளாதார மாநாட்டில் அதானி மேலும் பேசியதாவது: 2050ம் ஆண்டிலிருந்து சுமார் 10 ஆயிரம் நாட்கள் தள்ளி இருக்கிறோம். இந்த காலகட்டத்தில், இந்தியா தனது பொருளாதாரத்தை 25 லட்சம் கோடி டாலராக மாற்றியிருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன். இது 2050 வரை ஒவ்வொரு நாளும் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலாக 250 கோடி டாலர் சேர்ப்பதற்கு சமம். இந்த காலக்கட்டத்தில் இந்தியாவின் பங்குச் சந்தை மதிப்பு 40 லட்சம் கோடி டாலரை எட்டும் என எதிர்பார்க்கிறேன்.
2022ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 லட்சம் கோடி டாலராக உள்ளது. விரைவான பொருளாதார வளர்ச்சி, நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி, டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான காலநிலை ஆகிய நான்கு முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவதில் இந்தியாவைப் போல உலகில் எந்த ஒரு நாடும் தனித்துவம் வாய்ந்ததாக இல்லை. இவை அனைத்தும் டிரில்லியன் டாலர் சந்தைக்கான வாய்ப்புகள். உலகில் நாம் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை வரையறுக்கும் ஆண்டுகளாக அடுத்த மூன்று தசாப்தங்கள் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement