சென்னை:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபையில் இன்று விதி 110-ன்கீழ், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
வருகிற 24.4.2022 அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப் படுகிறது. அதனை முன்னிட்டு சில அறிவிப்புகளை இந்த மாமன்றத்திற்கு நான் வழங்க விரும்புகிறேன்.
உள்ளாட்சி என்பது மக்களாட்சியினுடைய ஜனநாயகத்தின் ஆணிவேர். அது வலிவுடனும் பொலிவுடனும் இருந்தால்தான், அரசினுடைய நலத் திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்றடையும்.
திமுக ஆட்சி அமையும் போதெல்லாம், உள்ளாட்சிகளின் உரு சிதையா வண்ணம், உயர்த்தி வலிமைப்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். அதற்கேற்ப திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருவதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.
உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்திடவும், உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகள் மற்றும் திட்டச் செயலாக்கங்கள் குறித்து தகவல், கல்வி மற்றும் தொடர்பு இயக்கங்கள் நடத்திட ஏதுவாக, ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தினத்தை ‘உள்ளாட்சிகள் தினம்’ எனக் கொண்டாட வேண்டுமென்று நான் துணை முதலமைச்சராக இருந்தபோது முடிவு மேற்கொள்ளப்பட்டது.
2007 நவம்பர், 1 ஆம் நாள் அன்று உள்ளாட்சி தினமாகக் கொண்டாடப்பட்டது. இறுதியாக 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டாடப்பட்டு, அதற்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டது.
கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திடவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும், இடையில் நடத்தப்படாமல் போன இந்த நிகழ்வு, மக்கள் இயக்கமாக மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி, “உள்ளாட்சிகள் தினமாக”கொண்டாடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கிராமங்களை வலிமைப்படுத்தவும், அங்கே வளர்ச்சியினை ஊக்கப் படுத்தவும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரங்கள் ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கி, கிராம சபை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கிராம சபைக்கு என குறிப்பிட்ட அதிகாரங்களும், பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
கலைஞர் முதல்வராக இருந்தபோது, 1998 ஆம் ஆண்டில் முதல் முறையாக, ஆண்டிற்கு 4 முறை, குறிப்பிட்ட நாட்களில் கிராம சபை நடத்தப்பட வேண்டும் என்பதை அரசாணையாக வெளியிட்டார்.
அதனடிப்படையில், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தாலும், அவ்வப்போது சிறப்பு கிராம சபைக் கூட்டங்களும் தேவையின் அடிப்படையில் மிகக் குறுகிய கால அறிவிப்புகள்மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு குறுகிய கால அறிவிப்புகள்மூலம் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் போது, மக்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது என்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
எனவே, இதைக் கருத்திற்கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்த வேண்டிய கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்களின் பங்கேற்பினை உறுதி செய்வது அவசியம் எனக் கருதி, இந்த ஆண்டு முதல், ஆண்டிற்கு 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த வகையில், ஜனவரி 26-குடியரசு தினம், மே-1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட்-15 சுதந்திர தினம், அக்டோபர்-2 அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினம் ஆகிய நாட்களில் நடைபெற்று வரக்கூடிய கிராம சபை கூட்டங்கள், இனி வரும் காலங்களில், கூடுதலாக மார்ச்-22 உலக தண்ணீர் தினம் அன்றும், நவம்பர்-1 உள்ளாட்சிகள் தினம் அன்றும் நடத்தப்படும் என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாதாந்திர அமர்வுப் படி தொடர்பாக குறிப்பிட விரும்புகிறேன். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான், முதன்முதலாக மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கு அமர்வுப் படி வழங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்பிறகு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த இந்த அமர்வுப் படியினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
அதன் அடிப்படையில், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் அமர்வுப் படித் தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்றும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப் படித் தொகை ஐந்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அமர்வுத் தொகை உயர்த்தி வழங்கப்படுவதால், தமிழகத்திலுள்ள 12,525 கிராம ஊராட்சித் தலைவர்கள், 99,327 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், 6,471 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 36 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 655 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 1 லட்சத்து 19 ஆயிரம் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பயன் பெறுவார்கள்.
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் தங்களின் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் செயல்படுத்தப்படக்கூடிய பல்வேறு திட்டப் பணிகளைக் கண்காணித்திட முதன்முறையாக 2008 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, 385 ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன.
ஆனால், அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு வாகனங்களே வாங்கப்படாத நிலையில், கடந்த ஆட்சியில் 2019-2020 ஆம் ஆண்டில், புதிய வாகனங்கள் வழங்குவதற்கான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டன. ஆனால், செயல்முறைப்படுத்தப்படவில்லை.
இதனால் ஏறத்தாழ 13 ஆண்டு காலமாக புதிய வாகனங்கள் அவர்களுக்கு வழங்கப்படாத சூழல் உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் அந்தந்த ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப் படும் பணிகளைத் திறம்படக் கண்காணித்திட ஏதுவாக, தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
அடுத்தபடியாக, கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக் கொணரக்கூடிய வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய கிராம ஊராட்சித் தலைவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில், நான் துணை முதலமைச்சராகவும், துறையினுடைய அமைச்சராகவும் இருந்தபோதுதான், உத்தமர் காந்தி கிராம ஊராட்சி என்ற விருது 2006 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது.
10 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்புடைய ஊராட்சித் தலைவர்களுக்கு நற்சான்றிதழ், கேடயம் மற்றும் ரொக்கத் தொகை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில், 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை, 60 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதற்குப்பிறகு இடைப்பட்ட காலத்தில் இவ்விருது வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு முதல் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். சிறப்பாகச் செயல்படக் கூடிய கிராம ஊராட்சிகளுக்கு “உத்தமர் காந்தி விருது” 2022 ஆம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும் என்பதையும், ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு பத்து லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கிராம அளவில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு மட்டுமே அலுவலகங்கள் தனித்தனியே செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய சூழலில், பிற துறைகள் மூலம் கிராமங்களில் செயல்படுத்தப்படக்கூடிய திட்டங்களை ஒருங்கிணைத்து, அதனைக் கண்காணிக்க கிராம அளவில் வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
எனவே, உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற நோக்கத்துடன், மக்களாட்சியின் மாண்பினை கிராம அளவில் உறுதி செய்திட ஏதுவாக, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை மற்றும் சமூக நலத் துறை போன்ற முக்கிய துறைகளின்மூலம் செயல்படுத்தப்படக்கூடிய அரசின் பல்வேறு திட்டங்களை கிராம அளவில் ஒருங்கிணைத்து செவ்வனே செயல்படுத்திட 600 ஊராட்சிகளில் “கிராமச் செயலகங்கள்”இந்த ஆண்டே கட்டப்படும் என்பதை இந்த அவையில் பெருமகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.
இந்த கிராமச் செயலகங்கள் ஊராட்சித் தலைவருக்கான அறை, அனைத்துத் துறை கூட்ட அரங்கம், கிராம நிர்வாக அலுவலருக்கான அறை, கிராம ஊராட்சிச் செயலருக்கான அறை, இணைய வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும்.
இந்த புதிய முன்னெடுப்பின் முதற்கட்டமாக, இந்த ஆண்டு 600 புதிய கிராமச் செயலகக் கட்டடங்கள், ஒவ்வொன்றும் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோட்டையில் இருந்து திட்டங்களை வகுத்து, அதற்கான அரசாணைகளை அரசு பிறப்பித்தாலும், அவற்றினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய பணியை ஆற்றிக் கொண்டிருப்பது உள்ளாட்சி அமைப்புகள்தான். அந்தக் காரணத்திற்காகத்தான், நாங்கள் ஊரக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
அதனை மக்களும் நன்கு உணர்ந்துள்ள காரணத்தினால்தான், ஊரக, உள்ளாட்சி, நகர்ப்புறத் தேர்தல்களில், திமுக அரசின் மீது தமிழக மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, எங்களுக்கு இமாலய வெற்றியைத் தந்தார்கள் என்பதை நான் ஆணித்தரமாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
தமிழக மக்கள் எங்களது அரசின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை என்றென்றும் வீண்போகாத வண்ணம் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்று இந்த அவைக்கு உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.