மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டு முன்பு ஹனுமன் சாலீசா பாட முயன்ற எம்பி நவ்நீத் ரானாவும், அவரது கணவர் சுயேச்சை எம்.எல்.ஏ.வுமான ரவி ரானாவும் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிர மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா பாடப் போவதாக, அமராவதி மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவ்நீத் ரானாவும், அவரது கணவரும், சுயேச்சை எம்.எல்.ஏ.,வுமான ரவி ரானாவும் அறிவித்தனர். “அதனை படித்து மாநிலத்தில் உத்தவ் தாக்கரே அமைதியை நிலைநாட்ட வேண்டும். மாநிலத்தின் நலன் கருதி உத்தவ் தாக்கரே அனுமன் சாலீசா பாட வேண்டும்” எனக் கூறியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் அவர்கள் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மும்பை போலீசார், சட்டம் – ஒழுங்கை பாதிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்ததுடன், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
ரவி ரானா
மற்றும்
நவ்நீத் ரானா
வீட்டின் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கணவன் மனைவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் வீட்டின் முன்பு சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களது வீட்டிற்குள் நுழையவும் முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருவரை கண்டித்தும் தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனிடையே, மும்பையில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இச்சூழ்நிலையில் சட்டம் – ஒழுங்கிற்கு பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக , முதலமைச்சர் வீடு முன்பு ஹனுமன் சாலிசா பாடுவதை கைவிடுவதாக கூறினார்.
இந்நிலையில், நவ்நீத் ரானா மற்றும் அவரது கணவர் ரவி ரானா இருவரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிவசேனா கட்சியினர் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக அளித்த புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். நாளை இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.