கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்துக்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. கோவை மாவட்டத்தில் அதிமுக கைப்பற்றிய ஒரே பேரூராட்சியும் இதுவேயாகும். அதிமுகவை சேர்ந்த மருதாசலம் என்பவர் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த பாஜகவினர், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மாட்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து இன்று அங்கு சென்ற திமுக கவுன்சிலர்கள் அப்படத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கூச்சல் குழப்பம் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க, திமுக கவுன்சிலர் கனகராஜ் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை அகற்றினார்.
மேலும் “பேரூராட்சி அலுவலகத்தில் எந்த அனுமதியும் இல்லாமல் எப்படி பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்கலாம்?” என கேள்வி எழுப்பியுள்ள அவர், அனுமதி பெற்று வந்து பிரதமர் மோடியின் படத்தை வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, பாஜகவினர் பேரூராட்சி தலைவர் அனுமதியுடன் தான் புகைப்படம் வைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் இது குறித்து பேரூராட்சி தலைவர் மருதாசலத்திடம் திமுகவினர் கேட்ட போது அவர் முறையாக பதிலளிக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் பிரதமர் மோடி படம் அகற்றப்பட்டதகவலறிந்த பாஜகவினர் கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திமுக வார்டு உறுப்பினர் கனகராஜை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
சமீபத்திய செய்தி: `மாநகராட்சிக்கு இன்னும் தெளிவு கிடைக்கவில்லை’- விஷவாயு தாக்கியதால் மூவர் உயிரிழந்தது குறித்து மதுரை மேயர் அறிக்கைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM