புதுடில்லி:நாட்டில் எல்லைகளில் அமைந்துள்ள கிராமங்களுக்கு அதிகாரிகளும், வளர்ந்து வரும் மாவட்டங்களுக்கு மத்திய அமைச்சர்களும் நேரில் சென்று, குறைந்தது இரண்டு நாள் தங்கியிருக்க, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அங்கு, அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது பற்றியும், வளர்ச்சியின் வேகம் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும் என, அவர்களிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் உட்பட ௧௧௮ மாவட்டங்களை, ‘வளரும் மாவட்டங்கள்’ என, , மத்திய அரசின் ‘நிடி ஆயோக்’ அமைப்பு ௨௦1௮ல் அறிவித்தது. இந்த மாவட்டங்களில், மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலர்களை, பிரதமர் மோடி இந்த மாத துவக்கத்தில் சந்தித்துப் பேசினார்.
அறிவுறுத்தல்
அப்போது அவர் கூறியதாவது:நாட்டின் எல்லைகளில் அமைந்துள்ள கிராமங்களுக்கு அதிகாரிகள் செல்ல வேண்டும். அங்கு மக்களுடன் கலந்துரையாடி, அரசின் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைந்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். அப்பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றியும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது பற்றியும் திட்டங்கள் தீட்ட வேண்டும். இவ்வாறு பிரதமர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இதேபோல், வளரும் மாவட்டங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து மாவட்டங்களிலும், மத்திய அமைச்சர்கள் இரண்டு பேர் தங்கியிருந்து, அங்கு வளர்ச்சி பணிகளின் வேகத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, பல்வேறு துறைகளின் செயலர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அனைத்து அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து, எல்லைப்புற கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என, பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால், எல்லைப்புற கிராமங்களுக்கு உதவி செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் சென்று, ஒன்று அல்லது இரண்டு நாள் தங்கி ஆய்வு செய்ய வேண்டும். கிராம மக்களுடன் கலந்துரையாடி, வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்கிறேன்.
ஆய்வு
எனவே, எல்லைப்புற கிராமங்களுக்கு செல்லும் சிறப்பு அதிகாரி ஒருவரை, ஒவ்வொரு அமைச்சகமும் விரைவில் தேர்வு செய்ய வேண்டும்.அவர்கள் இம்மாத இறுதிக்குள், எல்லைப்புற கிராமங்களுக்கு சென்று, ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அஜய் பல்லா கடிதத்தில் கூறிஉள்ளார்.இதையடுத்து, ஒவ்வொரு அமைச்சகமும், எல்லை கிராமங்களுக்கு செல்வதற்கான சிறப்பு அதிகாரியை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
ஜம்மு – காஷ்மீர், உத்தரகண்ட், சிக்கிம், அருணாச்சல், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லைப்பகுதி கிராமங்களுக்கு இந்த அதிகாரிகள் சென்று, ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது .இதற்கிடையே, பிரதமரின் உத்தரவை ஏற்று, வளரும் மாவட்டங்களுக்கு செல்ல, மத்திய அமைச்சர்களும் தயாராகி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்துக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாருக்கு வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் செல்ல திட்டமிட்டு உள்ளனர்.இந்நிலையில், மாநில பா.ஜ., தலைவர்களுக்கு கட்சியின் தேசிய தலைவர் நட்டா எழுதி உள்ள கடிதத்தில், ‘உங்கள் மாவட்டத்தில் உள்ள வளரும் மாவட்டங்களுக்கு மத்திய அமைச்சர்கள் வரும் போது, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’ என, உத்தரவிட்டுள்ளார்.