உலான்பாடர் (மங்கோலியா),
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் ஜப்பானின் சுகுமி சகுராயிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.
அரியானாவை சேர்ந்த 20 வயதான அன்ஷூ ஆசிய போட்டியில் கைப்பற்றிய 3-வது பதக்கம் இதுவாகும். அவர் 2020-ம் ஆண்டு வெண்கலப்பதக்கமும், கடந்த ஆண்டு தங்கப்பதக்கமும் வென்று இருந்தார். மேலும் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ராதிகா வெள்ளிப் பதக்கமும், 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மனிஷா வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.