சென்னை: இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைக் கணக்கிடும் ஆர்-வேல்யூ திடீரென கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், நாட்டில் கரோனா 4-வது அலை ஏற்படுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆர்-வேல்யூ என்றால் என்ன? ஆர்-வேல்யூ என்பது எண் வரிசையில் 1-க்கும் குறைவாக இருந்தால்தான் கரோனா பரவல் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். 1 அல்லது அதிகமாகச் செல்லும்போது, கரோனா பரவல் வேகம் அதிகரி்க்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஆர் வேல்யூ என்பது தொற்றுள்ள ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு அது பரவுகிறது என்பதைக் குறிக்கும்.
இந்நிலையில்சென்னை ஐஐடியின் கணிதத்துறை, கணினி கணிதவியல் மற்றும் புள்ளிவிவர அறிவியல் பிரிவின் பேராசிரியர்கள் நீலிஷ் எஸ் உபாத்யாயே,எஸ் சுந்தர் ஆகியோர் தலைைமயிலான குழு இணைந்து இந்த ஆய்வை நடத்தின. இதில் கடந்த வாரம் மட்டும் டெல்லியின் ஆர் வேல்யூ 2.1 என்றளவில் அதிகரித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆர் வேல்யூவும் 1.3 என்ற அளவில் உள்ளது.
இதை வைத்து இந்தியாவில் கரோனா 4வது அலை ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பேராசிரியர் ஜெயந்த் ஜா, இப்போதே அதைப் பற்றி கணிப்பது சரியாக இருக்காது. இப்போதைய ஆய்வின்படி ஒவ்வொரு தொற்றாளரும் இருவருக்கு தொற்றைக் கடத்துகின்றனர் என்பது மட்டுமே உறுதியானது. இப்போது மக்களின் எதிர்ப்பாற்றல் இருக்கிறது என்று தெரியவில்லை. மேலும், ஜனவரியில் ஏற்பட்ட மூன்றாவது அலையின் போது பாதிக்கப்பட்டவர்கள் இப்போது பாதிப்புக்கு உள்ளாகிறார்களா என்ற தரவுகள் இல்லை. டெல்லியைத் தவிர மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற மற்ற மெட்ரோ நகரங்களில் இன்னும் கரோனா தொற்று கட்டுக்குள் தான் இருக்கிறது என்றார்.
புதிதாக 2,527 பேருக்கு தொற்று: கரோனா புள்ளிவிவரம்: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேர் புதிதாக கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 15,079 பேர் கரோனா தொற்று பாதிப்புடன் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,55,179 பேரிடம் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் 2,527 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டில் இதுவரையில் மொத்தம் 83.42 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய் தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,656 பேர் மீண்டுள்ளதாக தனது தினசரி கரோனா அறிக்கையில் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 187.46 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.