’இதுநடக்காவிட்டால் 15 மணி நேர மின்வெட்டு அமலாகும்’ – எச்சரிக்கும் மின்வாரிய அதிகாரிகள்!

தமிழ்நாடு மின்வாரியம் உடனயாக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிடில் 2011-12 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது போன்று 15 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்திக்காக 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. நாள்தோறும் 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் நிலையில், மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனம் மூலம் 50,000 மெட்ரிக் டன் மட்டுமே கிடைப்பதால், 20 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு இறக்குமதியையே நம்பியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்துவருகிறது.
image
நிலக்கரி இறக்குமதி தொடர்பாக மத்திய அரசின் கொள்கைகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகின்றன. முதலில் அனுமதி, பின்னர் தடை எனஅறிவித்த மத்திய அரசு, தற்போது உள்நாட்டு நிலக்கரியுடன், இறக்குமதி செய்யப்பட்ட 10 விழுக்காடு நிலக்கரியை சேர்த்து பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டுக்கு தற்போது ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. உள்நாட்டு நிலக்கரி மூலம் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு மூன்று ரூபாய் 50 காசுகள் செலவாகிறது. அதேநேரத்தில் வெளிநாட்டு நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு 7 ரூபாய் செலவாகிறது.
image
தமிழக அரசு தற்போது 4.8 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. நாள்தோறும் 20 ஆயிரம் டன் தட்டுப்பாடு உள்ள நிலையில், உடனடியாக நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தமிழ்நாடு மின்வாரியம் தள்ளப்பட்டுள்து. இல்லையேல், கடந்த 2011-12 ஆம் ஆண்டு ஏற்பட்டது போன்று 12 முதல் 15 மணி நேரம் வரை மின்வெட்டை அமல்படுத்த வேண்டிய நிலை உருவாகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.