வாஷிங்டன்,
மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய அமைப்பின் வருடாந்திர மாநாடு மற்றும் உலக வங்கி வருடாந்திர கூட்டம் உள்பட பல கூட்டங்களில் கலந்துகொள்ள அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த கூட்டங்களை முடித்துக் கொண்டு கிளம்பும் முன், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்திய செய்தியாளர்கள் குழுவுடனான உரையாடலின் போது, இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவு முன்னேறியுள்ளது. இருதரப்பு உறவை யாரும் கேள்வி கேட்கவில்லை. இருநாட்டு உறவுகள் ஆழமடைந்துள்ளன. உக்ரேனியப் போருக்குப் பிறகு, பல்வேறு வாய்ப்புகள் மேலும் மேலும் வெளிப்பட்டு வருகின்றன.
‘ரஷியாவைப் பற்றிய உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் அளவீடு செய்துள்ளீர்கள், நீங்கள் எங்களுடன் நெருங்கி வருவது போல் தெரியவில்லை’ என்ற அமெரிக்கவின் கருத்துக்கு ‘அப்படி இல்லை’ என்பதே இந்தியாவின் பதில்.
ரஷியாவுடன் பாதுகாப்பு உபகரணங்களுக்கான பாரம்பரிய சார்பு மட்டுமல்ல. பல ஆண்டுகளாக ரஷியாவுடன் கொண்டுள்ள உறவுகளைப் போலவே, இந்தியாவிற்கு மரபு சார்ந்த சிக்கல்கள் உள்ளன.
ரஷியாவுடன் எங்களுக்கு ஒரு நேர்மறையான புரிதல் உள்ளது. இது எதிர்மறையான புரிதல் அல்ல.
இந்தியாவிற்கு அண்டை நாடுகளுடன் பல பிரச்சினைகள் உள்ளன. வடக்கு எல்லையில், கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் பதற்றம் நிலவுகிறது. மேற்கு எல்லையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத பிரச்சனைகளை சந்திக்க இந்தியாவிலிருந்து கொடுக்கப்பட்ட உபகரணங்கள் எங்களை தாக்க திசை திருப்பப்பட்டன.
இப்படி பல பிரச்சினைகள் இந்தியாவுக்கு உள்ளன. இதனால் ரஷியாவுடன் இந்தியா இத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது.
அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. இந்தியா நிச்சயமாக அமெரிக்காவுடன் நட்புறவை விரும்புகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், அவர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இடையில் காணொலி மூலம் முடிவடைந்த பேச்சுவார்த்தை குறித்து விளக்கினார்.