ஏற்கனவே உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி தயக்கம் காட்டுவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைனுக்கெதிராக ஜேர்மன் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என புதிதாக தற்போது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு, ரஷ்ய கிரீமிய பிரச்சினையின்போது, புடினுக்கு ஏவுகணைகள், துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட்கள் முதலான ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாக பிரித்தானிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
அந்த நேரத்தில் ஜேர்மனி மட்டுமின்றி பிரான்ஸ் நாடும் ரஷ்யாவுக்கு போர் உபகரணங்களை அனுப்பியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கிரீமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்ட பிறகு, இத்தாலி, ஆஸ்திரியா, பல்கேரியா மற்றும் செக் குடியரசும் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஜேர்மனி முதலான நாடுகள் அனுப்பிய அந்த ஆயுதங்களே உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்புவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்டியிருப்பதாக ஜேர்மனி தற்போது அறிவித்துள்ளது.
இதற்கிடையில், தங்களிடம் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் இல்லாததாலேயே, உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பாமலிருக்கும் முடிவை ஜேர்மன் அரசு எடுத்ததாக, ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholz விளக்கமளித்துள்ளார்.