ட்விட்டரில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் மற்றும் அமித் மிஸ்ரா பதிவுகள் தற்போது பெரும் விவாதம் உள்ளாகியுள்ளது.
நம் இந்திய தேசம் குறித்து இர்பான் பதான் டிவிட்டர் பதிவில், “என் நாடு அழகான நாடு. உலகின் மிகப் பெரிய நாடாகும். வல்லமை கொண்ட நாடாகும். ஆனால்….,” என்று தனது பதிவை முழுமையாக நிறைவு செய்யாமல் பதிவிட்டிருந்தார்.
இர்பான் பதானின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அமித் மிஸ்ரா, “என் நாடு அழகான நாடு. உலகின் மிகப் பெரிய நாடாகும். வல்லமை கொண்ட நாடாகும். ஆனால், அரசியலமைப்புதான் பின்பற்ற வேண்டிய முதல் புத்தகம் என்பதை ஒரு சிலர் உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியம்” என்று இர்பான் பதானின் டிவிட்டை நிறைவு செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.
இவர்களின் இந்த பதிவுகள் என்ன விவகாரம் பற்றியது என்று குறிப்பிடப்படாததால், டெல்லி ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற வன்முறை பற்றிய பதிவுதான் என்று சமூகவலைதள வாசிகள் அதிகம் பகிர்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் சிலர், ‘தைரியம் இருந்தால் வாக்கியத்தை நிறைவு செய்’ என்று இர்பான் பதானை சாட, விவகாரம் வேறு திசை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.