இந்தியாவை அச்சுறுத்தினால், பயங்கரவாதிகளுக்கு எதிராக எல்லை தாண்டி வந்து நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1971 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில், வடகிழக்கு மாநிலமான அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடந்த விழாவில், பாஜக மூத்தத் தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான
ராஜ்நாத்
சிங் பேசியதாவது:
பயங்கரவாதத்தை கடுமையாக கையாளுவோம் என்ற செய்தியை இந்தியா அனுப்பி உள்ளது. வெளியில் இருந்து நாட்டை அச்சுறுத்தினால், எல்லை தாண்ட தயங்க மாட்டோம். வங்கதேசம் போன்ற நட்பு நாடு காரணமாக, மேற்கு எல்லையை காட்டிலும், கிழக்கு எல்லை தற்போது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையுடன் நிலவுகிறது. இங்கு, ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால், அமைதி நிலவுகிறது.
இந்திய வீரர்கள் என்ன செய்தார்கள், நாங்கள் (
மத்திய அரசு
) என்ன முடிவுகளை எடுத்தோம் என்பதை என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டால், இந்தியா யாரையும் விட்டு வைக்காது என்ற செய்தி சீனாவுக்கு சென்றுள்ளது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தியாவின் உருவம் மாறி விட்டது. இந்தியாவின் கவுரவம் மேம்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், உலகின் தலைசிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.