சென்னை:
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு சார்பில் ‘டெக் நோ 2022’ நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கல்வி, தொழில் மற்றும் சுகாதாரத் துறைக்கான தமிழ் குடிமகன் விருதுகளை வழங்கினார். தொழிற்துறையினருக்கு 8 பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கினார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், எந்த துறையும் தனித்துறையாக செயல்பட முடியாது, ஒவ்வொரு துறையும் தேவையான நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
‘கல்வி, தொழில் மற்றும் உற்பத்தி துறை இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகளை மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் பணிக்கு தேர்வு செய்கின்றன. சிறந்த முதல்வர் ஸ்டாலின் என்பதைவிட, சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்பதிலேயே எனக்கு மகிழ்ச்சி. நமது சாதனைகளுக்கு சமூக நீதி கொள்கையே முக்கிய காரணம்’ என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.