மனித நாகரிகத்தின் பெரும் செல்வங்களில் ஒன்று ‘1001 அரேபிய இரவுகள்’ கதைத் தொகுதி. சொல்லப்பட்ட காலம்தொட்டு இன்றுவரை வாசிப்பில் புதிய திறப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் இக்கதைகளின் நவீனத் தமிழ் மொழிபெயர்ப்பை, தேனி மருத்துவக் கல்லூரியில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்டாகப் பணிபுரிந்துவரும் முகமது சஃபி கொண்டுவந்துள்ளார். உளப்பகுப்பாய்வில் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கும் சஃபி, அரேபிய இரவுகள் கதைகளில் பல்வேறு அம்சங்கள் குறித்து இங்கு பகிர்ந்துகொள்கிறார்.
“ ‘1001 அரேபிய இரவுகள்’ கதைகளை நீங்கள் முதன்முறையாகக் கண்டடைந்த தருணம் எது; முதல் வாசிப்பு உங்களுக்குள் ஏற்படுத்திய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?”
“அநேகமாக எல்லாத் தமிழ் வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமான ‘கன்னித் தீவு’, ‘சிந்துபாத்’ வழியாகவே ‘1001 அரேபிய இரவுக்கதைகள்’ எனக்கும் அறிமுகமானது. மாயாஜாலங்களும், பறக்கும் கம்பளங்களும், இராட்சசப் பறவைகளும், பல தேசங்களுக்கான பயணங்களும் எல்லாக் குழந்தைகளையும் கவர்ந்தது போலவே என்னையும் கவர்ந்திருக்கும்.
ஆனால், ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படங்கள் எல்லாம் அரேபிய இரவுகளின் கதைத் தொகுதியைச் சார்ந்தவை எனப் பின்னால் புரிந்து கொண்டேன். எம்.ஜி.ஆருக்கு முன்பே, 1941-ல் என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் இணையர் இணைந்து ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என்ற பெயரில் ஒரு படம் நடித்திருக்கின்றனர்; அப்படத்தின் பிரதி இப்போது கிடைக்கவில்லை. ‘அலிபாபா நாற்பது திருடர்களும்’ 1920-களில் சபா நாடகமாக போடப்பட்டிருக்கிறது.
எண்பதுகளின் இறுதியில் மவுன்ட்ரோட் காயிதேமில்லத் பெண்கள் கலைக் கல்லூரியில்தான புத்தகக் கண்காட்சி நடக்கும். அங்கே ஸ்டான்டர்ட் லிட்ரேட்ச்சர் பதிப்பகத்தார் ஸ்டால் போடுவார்கள். அதில் ரிச்சர்ட் பர்ட்டன் (Richard Burton) மொழிபெயர்த்த அரபுக்கதைகளின் பதினாறு தொகுதிகள் கறுப்பு அட்டையுடன் தங்கப்பூச்சிட்ட தலைப்புகளுடன், காலிகிராஃபி ஸ்டைலில் எழுதப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். படிக்கும் காலத்தில் வாங்க முடியாத நிலை. வருடந்தோறும் தடவிப் பார்த்துவிட்டு வந்து விட வேண்டியதுதான்.”
“அரேபிய இரவுகள் மீதான உங்கள் வாசிப்பு இத்தனை ஆண்டுகளில் எப்படி மேம்பட்டு வந்திருக்கிறது; இதை மொழிபெயர்க்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்தது எப்போது?”
“முல்லா நஸ்ருத்தீன் கதைகளையும், சூஃபி கதைகளையும் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்த கையோடு அரபுக்கதைகளையும் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டிய ஆர்வம் இருந்தாலும் உடனே கைகூடவில்லை. பாக்தாதில் பிறந்த ஹுஸைன் ஹத்தாவி என்ற ஆங்கில இலக்கியம் போதிக்கும் பேராசிரியர் மொழிபெயர்த்த அரபுக்கதைகள் ஒரு உந்துதல் தந்தன. அவர் மொழிபெயர்த்த பதினான்காம் நூற்றாண்டைச் சார்ந்த முஹ்ஸின் மஹ்தி என்பவர் தொகுத்த சிரியாவைச் சார்ந்த, இருநூற்று எழுபத்தியொன்று இரவுகளோடு கதைகள் முடிந்துவிடும் அரேபிய இரவுகள் தொகுதியே இப்போது சுத்தப் பிரதியாகக் கருதப்படுகிறது. பிறகு அரபுக்கதைகளின் தோற்றம் வளர்ச்சி, எல்லை கடந்த அதன் வீச்சு ஆகியவற்றின் வரலாற்றைப் படிக்கையில் எனக்கு சுவாரஸ்யம் தோன்றியது.
ஆயிரத்தோரு அரேபியக் கதைகளின் மூலம் அரபி மொழியல்ல. அது பாரசீக மொழியில் எழுதப்பட்ட ஹஸர் அஃப்ஸனா (ஆயிரம் கட்டுக்கதைகள்) என்பதிலிருந்து பெறப்பட்டதாகும். அது ஒன்பது-பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது. மூலம் பாரசீகமாக இருந்தாலும் காலப்போக்கில் அரபுப் பண்பாட்டின் அம்சங்களை உள்வாங்கிக் கொண்டு அரேபியக் கதைகள் உருப்பெற்றன.
வாய்மொழிக்கதைகளாக வழங்கிவந்த அரேபியக் கதைகள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் எகிப்து, சிரியாவை ஆண்ட அடிமைகள் வம்சம் என்றழைக்கப்படும் மம்லுக்குகளின் ஆட்சிக் காலத்தில் (1250-1517) இறுதியாக எழுதி வைக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
அதற்கும் மேலாக ஆயிரத்தொரு இரவுக்கதைகள் கதைக்கரு கதாபாத்திரங்கள், கருவின் மூலங்கள், அதைப்பற்றிய நாட்டார் ஆய்வுகள் எல்லாம் உள்ளடக்கிய, உல்ரிச் மர்ஜோல்ப் (Ulrich Marzolph) என்பவர் உருவாக்கிய அரேபிய இரவுக்கதைகளின் கலைக்களஞ்சியத்தைப் சென்னை கன்னிமாரா நூலகத்தில் பார்க்க நேரிட்டது… அதுதான் கூடுதல் உத்வேகத்தைக் கொடுத்தது. அதுபோக ஹஸன் எல்ஷாமி என்ற கெய்ரோவைச் சார்ந்த நாட்டுப்புற ஆய்வாளர் அரபுக்கதைகளோடு கதை அலகுகளைக் குறித்து தனித்த கலைக்களஞ்சியம் போட்டுள்ளதைப் படித்ததெல்லாம் சேர்த்து கூடுதல் தகவல்களோடு மொழிபெயர்ப்பைக் கொண்டுவர வேண்டும் என எண்ணம் தோன்றியது.
அடிப்படையில் ‘1001 அரேபிய இரவுக்கதைகள்’ என்றால், 1001 கதைகள் 1001 இரவுகளில் சொல்லப்பட்டதல்ல. நானூற்று ஐம்பது சொச்சக் கதைகள்தாம் 1001 இரவுகளுக்குக் கதைசொல்லி ஷராஸத்தால் நீட்டித்துச் சொல்லப்படுகிறது. இதுபற்றியெல்லாம் 1001 அரேபிய இரவுகள் இரண்டு தொகுதிகளில் குறிப்புகள் இணைக்கப்பட்டிருக்கின்றன.”
“மொழிபெயர்ப்பில் ஈடுப்பட்டபோது இந்தக் கதைகளில் உங்களுக்குப் புலனான அம்சங்கள் யாவை?”
“சிந்துபாத், அலாவுதீன் போன்றவை பெரும்பாலும் தனித்தனி கதைகளாகத்தான் அச்சிடப்பட்டுள்ளன. வை.கோவிந்தனின் சக்தி காரியாலயத்தின் மலிவுப்பதிப்பாக அ.லெ.நடராஜன் மொழியாக்கிய ‘அழியாப் புகழ்பெற்ற அரபுக்கதைகள்’ என்ற தலைப்பில் டிசம்பர் 1957 முதல் மே 1958 வரை ஆறுபகுதிகளாக மொத்தம் 2,500 பக்கங்களுடன் ஆறுபகுதிகளுக்கும் ரூ.15 செலுத்துமாறு வந்த விளம்பரத்தைப் பார்த்திருக்கிறேன். அதற்கு முன்னால் இஸ்லாமிய இதழியலின் முன்னோடியான ப.தாவூத்ஷா மொழிபெயர்ப்பில் ஷாஜஹான் புக்டிப்போ வெளியீடாக ‘அல்பு லைலா வ லைலா 1001 இரவுகள்’ என்ற தலைப்பில் ஏழு தொகுதிகளாக, தொகுதிக்கு ரூ.1 ஆக 1955-ல் வெளியாயிருக்கிறது. அத்தோடு எஸ்.மாரிச்சாமி பெரிய தொகுதியொன்றை வெளியிட்டுள்ளார்.
1825-லேயே பாண்டிச்சேரியைச் சார்ந்த பி.ஞானப்பிரகாச முதலியார் என்பவர் அரபு இரவு கேளிக்கைக்கதைகள் என்ற தலைப்பில் பன்னிரண்டு தொகுதிகள் ஒரே பக்கத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சடிக்கப்பட்டு வெளிவந்த தகவலை இஸ்லாமியர்களின் அச்சுப்பண்பாட்டைப் பற்றி விரிவாக எழுதிய ஜே.பி.பி.மோரெ என்பவர் தருகிறார்.
1876-ல் அராபிக் கதை தமிழில் அமரம்பேடு அண்ணாசாமி முதலியார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சிந்தாதரிப்பேட்டை பிராபகர அச்சுக்கூடத்தில் அச்சிற் பதிக்கப்பட்டதை மறைந்த தமிழறிஞர் மயிலை.சீனி வேங்கடசாமி தெரிவிக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழில் ஏராளமான பதிப்புகள் அரேபிய இரவுகளுக்கு வந்திருக்கின்றன. ஆந்த்வான் காலன்ட் 1704-ல் பிரஞ்ச் மொழியில் 1001 அரபுக்கதைகளை மேற்கில் அறிமுகப்படுத்தியதிலிருந்து அதற்கு ஏராளாமான மொழிபெயர்ப்புகள் பதிப்புகள் வந்துவிட்டன.
கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாகத் தமிழில் புதிதான மொழிபெயர்ப்பு இல்லாததால், அக்கதைகளின் வரலாறு மற்றும் மேலதிகக் குறிப்புகளோடு மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று தோன்றியதால் செய்தேன்.”
“ அரேபிய இரவுகளின் வாசிப்பு, ஓர் மருத்துவர்-உளவியலாளராக உங்களுக்கு எந்தளவுக்கு உதவியிருக்கிறது?”
“மனநலத்துறையும் நிறையக் கதைகேட்கும் துறைதான். தனிமனிதன் வாயிலாக சமூகம் பேசக்கூடியதைக் கேட்கவேண்டிய அவசியம் உள்ள துறை. ஆனால் நவீன மனநலத்துறை அறிவியல் என்ற போர்வைக்குள் இயங்குவதால் அதன் விதிப்படி தனிமனிதனின் பிரச்னைகளை நோய்க் குறிகளாகவே வகைப்படுத்தி வைத்துக்கொள்ளும்.
எனக்குத் தனிப்பட்ட முறையில் ஃப்ராய்டியச் சிந்தனைகள் பிடிக்கும். கறாரான அறிவியல் பின்புலத்லிருந்து வந்த அவருடைய சிந்தனையில் அறிவியல், கலைப்படைப்புகள் என்ற பிரிவிருக்காது. அறிவியல், கலை இரண்டுக்கும் உள்ள உரையாடலைக் கொண்டதாய் ஃப்ராய்டின் சிந்தனைகள் இருக்கும். ஷேக்ஸ்பியர், தாஸ்தேவ்ஸ்கி, எட்கர் ஆலன்போ, லியார்னடோ டாவின்சி ஆகியோரின் படைப்புகளைக் குறித்து அவர் நிறைய எழுதியிருக்கிறார்.
எல்லாப் படைப்புகளிலிருந்தும் பெற்றுக்கொள்ள இருப்பதைப்போலவே அரபுக்கதைகளிலிருந்து மனநலத்துறையைச் சார்ந்தவர்கள் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது.
1001 இரவுகளின் முகப்புக்கதையே உளவியல் சிகிச்சை பற்றிய கதைதான். மனைவி துரோகம் செய்துவிட்டாள் என்ற காரணத்துக்காக சுல்தான் ஷராயருக்கு பித்தேறி, எல்லாப் பெண்களையும் வெறுக்க ஆரம்பித்து, ஒவ்வொரு பெண்ணாக மணமுடித்து இரவு கழிந்ததும், காலையில் கொன்று விடுகிறார். அந்த நெருக்கடியில் கதைசொல்லியான ஷராஸத் சுல்தானை மணமுடித்து 1001 இரவுகள் கதைக்குள் கதைகளாகச் சொல்லுகிறாள். கதையின் இறுதியில் சுல்தானின் ஆவேசம் தணிந்து அவரது பார்வை விசாலமடைகிறது. அரேபிய இரவுகளின், கதைப் பரப்பு பெரியதாக இருப்பதால் ஒவ்வொரு வாசகரும் அதில் ஏதோ ஒன்றுடன் அடையாளம் கண்டுகொண்டு ஆசுவாசம் அடையலாம்.”
“‘அரேபிய இரவுக’ளின் இன்றைய பொருத்தப்பாடு என்ன; இன்றைய தலைமுறையினருக்கு ‘அரேபிய இரவுக’ளை எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்?”
“நாட்டார் கதை மரபுகள் இருப்பதற்கான பொருத்தப்பாடுதான் அரேபிய இரவுகள் கதைகளைப் பரிச்சயப்படுத்திக் கொள்வதற்கான பொருத்தப்படாக இருக்கும். நாட்டார் கதைகளில் இருப்பதைப்போல அரேபிய இரவுகளின் கதைகள் எளிமையான நேரிடைத்தன்மை கொண்டவை. அதே சமயத்தில் கதைப்போக்கின் ஏதோவொரு இடத்தில் வாழ்வின் அடிப்படை விஷயத்தைத் தொட்டுச் சென்றுவிடக்கூடியவை. அதனால்தான் பல நூறாண்டுகள் தாண்டியும் அது உயிர்ப்புடன் இருக்கிறது.
கதைவிளைந்த அரபு நிலங்களைத் தாண்டியும், இஸ்லாமியக் கலாசாரத்தின் முத்திரையைக் கொண்டிருந்தாலும் சகலரையும் அரேபியக் கதைகள் ஈர்த்திருந்த காரணத்தால்தான், யுனெஸ்கோ அமைப்பானது, 2004ல் அரபுக்கதைகளுக்கான ஆய்வரங்கை நடத்த ஏற்பாடு செய்தது.
கி.மு.496-ல் வாழ்ந்த சோபக்கிள்ஸ் எழுதிய நாடகமான ஈடிபஸ் ரெக்ஸ், பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த ஃப்ராய்டுக்கு சிந்தனையில் உத்வேகத்தை கொடுக்கவில்லையா? அதுபோலத்தான் அரேபியக் கதைகளும் செயல்படக்கூடியன.”
“இன்று உலகப் புத்தக தினம். உங்கள் துறை சார்ந்து தமிழில் கண்டிப்பாக மொழிபெயர்க்கப்பட வேண்டிய முக்கியமான புத்தகங்கள் சிலவற்றைப் பட்டியலிட முடியுமா?”
“எனக்கு உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகளில் ஆர்முண்டு. ஆனால் எந்தப் பல்கலைக்கழகங்களிலும் தனியாக உளப்பகுப்பாய்வு போதிக்கப்படுவதில்லை. ஆச்சரியம் என்னவென்றால் ஃப்ராய்டின் காலத்திலேயே அவரது சிந்தனைகள் கல்கத்தாவை எட்டிவிட்டன. அங்கிருந்த கிரிந்தரசேகர் போஸ், என்பவர் இந்தியாவில் செல்வாக்குப் பெற்றிருந்த யூங்கின் சிந்தனைகளில்கூட ஆர்வம் காட்டாமல் ஃப்ராய்டின் அணுகுமுறைகளில் ஆர்வம் கொண்டு, ஃப்ராய்டுடன் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தொடர்பில் இருந்திருக்கிறார். துரதிருஷ்டவசமாக அந்த மரபு தொடரவில்லை.
தனி நூலை மொழிபெயர்ப்பதைத் தாண்டி உளப்பகுப்பாய்வுக்கென்று வளமான சிந்தனை மரபுண்டு. ஃப்ராய்ட் தொடங்கி, வில்கம் ரெய்ச், எரிக் ஃப்ராம், ஹெர்பர்ட் மார்க்யூஸ், லக்கான், டெல்யூஸ் கட்டாரி என்று நிறைய சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை அறிமுகம் செய்யலாம்.
தனிப்பட்டு, 1940-கள் தொடங்கி கிட்டத்தட்ட முன்ணூறு படங்களுக்கும் மேலாக பைத்தியக்காரக் கதாபாத்திரங்கள் தமிழ்ப் படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. அப்படங்களில் ‘பைத்திய நிலை‘ எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதில் ஆர்வம் கொண்டு ஆய்வுசெய்து வருகிறேன்.”
1001 அரேபிய இரவுகள்
தமிழில்: சஃபி
உயிர்மை பதிப்பகம்
அடையாறு, சென்னை-20.
தொடர்புக்கு: 044 48586727
விலை: ரூ.930 (2 பாகங்கள்)