புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேர் புதிதாக கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 15,079 பேர் கரோனா தொற்று பாதிப்புடன் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,55,179 பேரிடம் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் 2,527 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டில் இதுவரையில் மொத்தம் 83.42 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய் தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,656 பேர் மீண்டுள்ளதாக தனது தினசரி கரோனா அறிக்கையில் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
187.46 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் (Recovery) விகிதம் 98.75 என உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.56 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.50 சதவீதமாகவும் உள்ளது. நாட்டில் இதுவரையில் மொத்தம் 4,25,17,724 பேர் தொற்று பாதிப்பில் இருந்து பூரணமாக குணம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்தியாவில் 2,451 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று இந்த எண்ணிக்கை 76 என அதிகரித்துள்ளது. டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் ஜூன் மாதம் 4வது அலை கரோனா பரவல் வேகமெடுக்கலாம் என்று பல்வேறு கணிப்புகளும் கூறும் நிலையில் தற்போது அன்றாட தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கேரளா, ஹரியாணா மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று நேற்று ஆண்கள் 30, பெண்கள் 27 என மொத்தம் 57 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 37 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,447 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 286 பேர் சிகிச்சையில் உள்ளனர்.