ஈரோடு அருகே கழிவறையை பள்ளி மாணவ மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்ததாக எழுந்த புகாரில் தலைமை ஆசிரியை உள்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த முள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மார்ச் மாதம் பள்ளி மாணவ மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மைதிலி மற்றும் ஆசிரியை சுதா ஆகியோர் மீது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலர் அமுதா விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியை உள்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க வேறு ஆசிரியர்களை நியமித்துள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM