மும்பை :
மகாராஷ்டிராவில் ஆட்கொல்லி கொரோனா தொற்றினால் 70 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். சாதாரண மக்கள் தவிர அரசியல் தலைவர்கள், இந்தி சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளை சேர்ந்த 18 மந்திரிகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த மந்திரிகளுக்கு ஆன சிகிச்சை செலவு குறித்து ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டு இருந்தார். இதையடுத்து கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:-
கடந்த 2 ஆண்டுகளில் மராட்டியத்தில் 18 மந்திரிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். அதற்கான கட்டணத்தை மாநில அரசு செலுத்தி உள்ளது. இதில் அதிகபட்சமாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபேக்கு கொரோனா சிகிச்சைக்காக ரூ.34 லட்சத்து 40 ஆயிரம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
மின்சார துறை மந்திரி நிதின் ராவத்திற்கு ரூ.17 லட்சத்து 63 ஆயிரமும், ஹசன் முஷ்ரிப் ரூ.14 லட்சத்து 56 ஆயிரமும், அப்துல் சத்தார் ரூ.12.56 லட்சம், ஜித்தேந்திர அவாத் ரூ.11.76 லட்சம், சகன் புஜ்பால் ரூ.9.03 லட்சம், சுனில் கேதார் ரூ.8.71 லட்சம், ஜெயந்த் பாட்டீல் ரூ.7.30 லட்சம், சுபாஷ் தேசாய் ரூ.6.97 லட்சம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர தற்போது அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ள மந்திரி நவாப் மாலிக்கிற்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தபோது மிக குறைந்த தொகையான ரூ.26 ஆயிரத்து 520 செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மந்திரிகளுக்கு சிகிச்சை அளித்த பாம்பே ஆஸ்பத்திரிக்கு ரூ.41 லட்சத்து 38 ஆயிரமும், லீலாவதி ஆஸ்பத்திரிக்கு ரூ.26 லட்சத்து 27 ஆயிரமும், பிரீச்கேண்டி ஆஸ்பத்திரிக்கு ரூ.15 லட்சத்து 37 ஆயிரமும் கட்டணமாக மாநில அரசு செலுத்தி உள்ளது.
தொற்று நோய் பாதிக்கப்பட்ட மந்திரிகளுக்கு மாநில அரசு மொத்தமாக ரூ.1 கோடியே 40 லட்சம் செலுத்தியதாகவும், அவர்களில் 5 பேருக்கு தலா ரூ.10 லட்சத்திற்கு மேல் செலவழித்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிக்கலாம்…
3 கியாஸ் சிலிண்டர்களை திறந்து வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்