“கோட்சேவை கொண்டாடினாலும் கூட இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சபர்மதி ஆசிரமத்திற்கு தானே அழைத்துச் சென்றீர்கள். இந்தியாவின் அடையாளம் இன்றும் காந்தி தான்” என்று பாஜகவை விமர்சித்துள்ளது சிவ சேனா.
இது குறித்து சிவ சேனா கட்சி தனது அதிகாரபூர்வ இதழான சாம்னாவில் விமர்சித்துள்ளது.
சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பாஜகவின் சித்தாந்தம் நாதுராம் கோட்சேவை ஆதரிக்கிறது. ஆனால் வெளிநாட்டுத் தலைவர்கள் வந்தால் உடனே அவர்களை மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு தான் அழைத்துச் செல்கிறது. உலகத் தலைவர்களும் அங்கு சென்று கைராட்டையில் நூல் நூற்றுச் செல்கின்றனர். அதேபோல் குஜராத்தில் தான் பிரம்மாண்டமான படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் அந்தச் சிலையை நிறுவினர். ஆனாலும் படேல் சிலைக்கு யாரையும் அழைத்துச் செல்வதில்லை. இந்தியாவின் அடையாளம் இன்றும் மகாத்மா காந்தி தான்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருபுறம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் நாட்டின் பல பகுதிகளிலும் மத வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியா சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த போது மத வெறுப்பும், வன்முறையும் இருந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது என்பதை இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் அறிந்து கொண்டிருப்பார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். முதல் நாளில் அவர் குஜராத்தில் சுற்றுப் பயணம் செய்தார். 2-வது நாளான நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, பொருளாதாரம், அணுசக்தி, பருவநிலை மாறுபாடு, சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தீபாவளிக்கு முன்பாக இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.