கோவிட் தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய புதிய மருந்திற்கான ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளனர் சென்னை ஐ.ஐ.டி-யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இன்டோமெதாசின் எனப்படும் விலை குறைந்த இம்மருந்தின் செயல்திறன் கோவிட் தொற்றிற்கு எதிரான சோதனையில் நல்ல முடிவுகளை அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
1960-களில் இருந்து அலர்ஜி போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டு வரும் இன்டோமெதாசின், அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இது குறித்த அறிவியல் அடிப்படையிலான ஆரய்ச்சிகளை இத்தாலிய, அமெரிக்க மருத்துவர்கள் ஏற்கனவே மேற்கொண்டிருந்தாலும் இந்திய ஆராய்ச்சியாளர்களே இதன் செயல்திறனை ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர். மியாட் மருத்துவனையின் சிறுநீரகவியல் துறை இயக்குனரான மருத்துவர் ராஜன் ரவீந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுகள் முழுவதும் பனிமலர் மருத்துவ கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான நிதியை Axilor ventures-இன் தலைவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் வழங்க, சென்னை ஐ.ஐ.டி-யின் பேராசிரியரான ஆர்.கிருஷ்ணகுமார் மொத்த ஆராய்ச்சியையும் ஒருங்கிணைப்பு செய்தார்.
முதலில் பேசிய ராஜன் ரவீந்திரன், “இன்டோமெதாசின் மருந்தை 30 ஆண்டுகளாக என் துறையில் பயன்படுத்திவருகிறேன். கொரோனா நோய் தொற்றினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்தே இம்மருந்தை சோதனைக்காக உட்படுத்தினோம். அவ்வைரஸுக்கு எதிராக இம்மருந்து நன்றாக வேலை செய்வதாக தற்போது இதற்கான அதிகாரபூர்வ சான்றுகள் கிடைத்துள்ளன” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார், “மொத்தமிருந்த 210 நோயாளிகளில் 107 பேருக்கு பாரசிட்டமாலுடன் கூடிய நிலையான சிகிச்சையும் மீதமுள்ளவர்களுக்கு இன்டோமெதாசினும் அளிக்கப்பட்டது. அனைவருமே தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். இதில் இன்டோமெதாசின் அளிக்கப்பட்ட எவருக்குமே ஆக்சிஜன் தேவைப்படும் நிலை உருவாகவில்லை. மேலும் மூன்று நான்கு நாள்களில் அனைத்து அறிகுறிகளில் இருந்தும் அவர்கள் மீண்டுவிட்டனர்” என்றார்.
இந்த ஒட்டுமொத்த ஆராய்ச்சியில் இக்குறிப்பிட்ட மருந்தின் பயன்பாட்டால் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டிற்கு எந்த எதிர்மறையான முடிவுகளும் எதுவும் வரவில்லை. மேலும் வெளியிடப்பட்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகளைத் தற்போது ICMR-க்கு அனுப்பியிருக்கும் இக்குழுவினர், விலை குறைந்த இம்மருந்தை கோவிட் சிகிச்சைக்கான நடைமுறையில் இணைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.