பட்டாபிராம் : பட்டாபிராம் அருகே, நீண்ட நாட்களாக சிதிலமடைந்த நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியையும், போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையையும் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டாபிராம், சோரஞ்சேரி 6வது வார்டு, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
சிதிலமடைந்த காரணத்தால், ஆறு மாதங்களாக தண்ணீர் நிரப்பாமல் வைத்திருந்தனர்.மாற்று நடவடிக்கையாக, பஜனை கோவில் தெருவில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, அப்பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.தற்போது அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மீண்டும் சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
இதனால் நீர்க்கசிவு அதிகமாகி, எந்நேரமும் ஆபத்து ஏற்படும் நிலைமை உள்ளது. அதேபோல், இந்த பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டது.தற்போது ஜல்லிகள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சோரஞ்சேரி ஆரம்ப சுகாதார மையத்திற்கு செல்ல, மக்கள் இந்த வழியை அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, மேற்கண்ட பிரச்னைகளை தீர்க்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
Advertisement