சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்

சென்னை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக சென்னை, தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், சென்னை மாநகர மின் கட்டுப்பாட்டு மையம் மற்றும் 24 மணி நேர மாநில மின் நுகர்வோர் சேவை மையம் மின்னகம் ஆகியவற்றை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  வி செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  செந்தில் பாலாஜி, மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 796 மெகாவாட்  மின்சாரம் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்படவில்லை  என்றும், நம்முடைய மின் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
‘நிலைமையை சரி செய்வதற்கான மாற்று ஏற்பாடுகள் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களுக்குள் தேவையான மின்சாரத்தை பெற்று முழுவதுமாக விநியோகம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நமக்கு மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க கூடிய 800 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு ஒட்டு மொத்தமாக எல்லா மாநிலங்களிலும் மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டிய சூழ்நிலையில்  இருக்கின்றன. ஓரிரு நாட்களுக்குள் தமிழகத்தில் மின்தடை, மின்வெட்டு சரி செய்யப்படும். முழு மின் உற்பத்தியை அதிகரித்து மின் விநியோகம் சீரான முறையில் வழங்கப்படும். 17,500 மெகாவாட் வரும் என கணக்கிடப்பட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்’ என்றார் அமைச்சர்.
அதன்பின்னர் இன்று இரவு அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில், மின் விநியோகம் சீராகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். 
‘796 MW மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. மாண்புமிகு முதல்வர் தளபதி @mkstalin அவர்களின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது’ என செந்தில் பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.