புதுடெல்லி: டெல்லி ஜஹாங்கீர்புரி கலவரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி முகமது அன்சார் உள்பட சிலர் மீது அமலாக்கத் துறை, சட்ட விரோத பணப் பரிமாற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 16ம் தேதி டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. அப்போது, ஜஹாங்கீர்பூரி பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில் திடீர் கலவரம் ஏற்பட்டது. இருபிரிவினர் இடையே நடந்த மோதலில் 8 போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். இதபோல், மத்திய பிரதேசம் உட்பட பாஜ ஆளும் சில மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி, ராமநவமி ஊர்வலங்கள் நடந்தபோதும் இருபிரிவினர் இடையே மோதல் நடந்தது. இதையடுத்து, அந்த பகுதிகளில் ஒரு பிரிவினர் ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகள், கடைகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், ஜஹாங்கீர்புரி வன்முறையில் தொடர்புடையவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கலவரத்துக்கு முக்கிய காரணமான முகமது அன்சார் (35) உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். அன்சார் உள்பட 5 பேர் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசின் முதல்கட்ட விசாரணையில், அன்சார் சூதாட்ட கிளப் நடத்தி வருவதும், பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரிக்கும்படி அமலாக்கத் துறைக்கு டெல்லி போலீஸ் ஆணையாளர் ராகேஷ் அஸ்தானா கடிதம் எழுதினார். இதன்படி, அன்சார் உள்ளிட்ட சிலர் மீது சட்ட விரோத பணபரிமாற்ற சட்டத்தின்கீழ் அமலாக்க துறை வழக்கு பதிவு செய்துள்ளது.