ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வாய் பேச வாய்ப்பு குறைவு என மருத்துவர்கள் கூறியதால் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் திருக்கழுகுன்றம் சாலையில் உள்ள நெய்குப்பி கிராமத்தில் வசிப்பவர்கள் பூபதி – கோடீஸ்வரி தம்பதியர். இவர்களுக்கு பிரித்திகா தேவி (13) ஹரிணி (7) ஆகிய இரு மகள்களும் ஹரிஹர சுதன் (2.5) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், மூன்றாவதாக பிறந்த ஹரிஹர சுதன், வாய்பேச முடியாத மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். அப்போது வாய் பேசுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த கோடீஸ்வரிக்கும் கணவன் பூபதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கம்போல் நேற்று காலை பூபதி வேலைக்குச் சென்றுவிட்டார், பிள்ளைகளும் பள்ளிக்குச் சென்றுவிட்டனர். இதைத் தொடர்ந்து மாலையில் பிள்ளைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கம் பூட்டியிருந்ததால் வெளியிலேயே அமர்ந்திருந்துள்ளனர்.
பின்னர் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பூபதி வீடு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டும் தன்னுடைய மனைவி தூக்கில் தொங்கியபடி இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் குழந்தையை நீண்ட நேரம் தேடிப்பார்த்தபோது அருகிலிருந்த குடி தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் சட்ராஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரண்டு பிரேதங்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM