புதுடெல்லி: ட்ரோன் தயாரிப்பை அதிகரிக்கும் நோக்கில் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் (பிஎல்ஐ) கீழ் 14 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களும் அடங்கும்.
இந்நிலையில் நேற்று இந்தோ – அமெரிக்கன் வர்த்தக சபை நிகழ்வில் மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசினார்.
ரூ.5,000 கோடி அளவில்..
அப்போது அவர் கூறும்போது, ‘‘தற்போது ட்ரோன் சேவை துறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அத்துறையில் ரூ.5,000 கோடி அளவில் முதலீட்டு வாய்ப்பு உருவாகியுள்ளது. அந்த வகையில் ட்ரோன் துறை சார்ந்து அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்’ என்று தெரிவித்தார்.
மேலும் அவர், ‘இந்தியாவில் நகர்மயமாக்கல் வேகம் கண்டுள்ளது. 2031-ல் நாட்டின் தேசிய வருவாயில் 75 சதவீதம் நகர் புறங்களிலிருந்து வரும். இந்த மாற்றத்தில் போக்குவரத்து கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கும்’’ என்றார்.