சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அளவில் கொரோனா தொற்று மிக குறைந்து, இயல்பு நிலை திரும்பி, பொருளாதார நிலை படிப்படியாக உயரக்கூடிய சூழலில், தற்பொழுது புதுடெல்லி மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களில் மீண்டும் கொரோனா எண்ணிக்கை கூடுவதாக அரசு புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.
எனவே இதனை உடனடியாக நாடு முழுவதும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தற்பொழுது கொரோனா பரவல் ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழக அரசினுடைய கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் விரைவுப்படுத்த வேண்டும்.
குறிப்பாக
கொரோனா தடுப்பூசி
இதுவரை போடாதவர்களையும், இரண்டாவது தடுப்பூசி போடாதவர்களையும் கண்டறிந்து, அவர்களை கணக்கெடுத்து ஒரு காலக்கெடுவிற்குள் அவர்களுக்கு போடுவதற்கான அவசர, அவசிய முகாம்களை அந்தந்த பகுதிகளில் நடத்த வேண்டும்.
ஒருசில வாரங்களுக்கு முன்னர் 12 வயது முதல் 15 வயதுக்குள் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு முதல் கட்டமாக
கொரோனா தடுப்பூசி
போடப்பட்டது. அவர்களின் கல்வி தடைபடாதவாறு அவர்களுக்கு அடுத்த கட்டமாக கொரோனா கோட்பாடுகள்படி இரண்டாவது தடுப்பூசி செலுத்த தமிழக அரசு துரிதமாக நட வடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் சுத்தம், சுகாதாரம் போன்றவற்றை அரசு மட்டும் கண்காணிக்காமல், மக்களே அதற்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழக அரசு அதற்கான விழிப்புணர்வை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.
பொருளாதார ரீதியாக நாம் படிப்படியாக உயரக்கூடிய நிலையில், கடின உழைப்பையும் முயற்சியையும் மேற்கொண்டு இருக்கும் அத்துனை பேர்களின் நோக்கம் தடைப்படாமல் நிறைவேற மாநில அரசு கொரோனாவை ஆரம்பத்திலேயே தடுக்க கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.