தருமபுரி அருகே 16 வயது சிறுமி ஒருவர் தனது அத்தையின் வீட்டில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வருகின்றார். அந்த மாணவியின் தாய்க்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், அவர் ஓசூரில் தங்கியிருக்கிறார். சிறுமியின் தந்தை இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், குடும்பச் சூழல் காரணமாக அந்த சிறுமி தருமபுரியில் உள்ள அவரின் அத்தையின் வீட்டில் தங்கிப் படித்து வருகின்றார். வீட்டின் மேல்மாடியில் பெரிய அத்தையின் குடும்பம் வசித்துவரும் நிலையில், கீழே உள்ள வீட்டில் வசிக்கும் சின்ன அத்தையின் பராமரிப்பில் சிறுமி இருந்துள்ளார்.
மேல் வீட்டில் வசிக்கும் சிறுமியின் அத்தை கவிதாவின் கணவர் ஓம்சக்தி, வாகன ஓட்டுநர். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் மாணவி மேலே இருக்கும் அத்தையின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். அப்போது ஓம்சக்திக்குச் சிறுமியின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அந்த ஆசையைத் தனது மனைவி கவிதாவிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பள்ளி முடிந்து வந்த சிறுமியை மேலே அழைத்த கவிதா இது குறித்து சிறுமியிடம் பேசியிருக்கிறார்.
அவர் சொன்னதற்குச் சிறுமி மறுப்பு தெரிவித்த நிலையில், சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டினுள் தள்ளியதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து, ஓம்சக்தி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக யாரிடமாவது கூறினால் ஓசூரில் உள்ள உனது அம்மாவைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டவும் செய்திருக்கிறார்கள். இதற்கு பிறகும் சிறுமிக்குப் பலமுறை கொடுமை செய்திருக்கிறார்கள். என்ன செய்வது… யாரிடம் சொல்வது என்று தெரியாமல் சிக்கித் தவித்த சிறுமி, அங்கிருந்து ஓசூருக்குச் சென்று தன் தாயிடம் நடந்த அனைத்தையும் சொல்லி அழுதிருக்கிறார்.
இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், இதுகுறித்து தருமபுரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓம்சக்தி, அதற்குத் துணையாக இருந்த அவரின் மனைவி கவிதாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சொந்த அத்தை மாமாவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.