சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் படிப்புகள் துறையை தொடங்கக் கோரிய வழக்கில் பல்கலைக்கழகம், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளுவர் பல்கலைக்கழக சிண்டிகேட் முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் படிப்புகள் என்ற பெயரில் தனித் துறையை அமைக்க 2006-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில் 2007-ம் ஆண்டு பல்கலைக்கழக கல்விக் குழுமம் (University Academic Council) புதிய துறையை தொடங்க ஒப்புதல் அளித்தது. 2008-ம் ஆண்டு அம்பேத்கர் படிப்புகள் துறை அமைக்க பல்கலைக்கழக வேந்தருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின் இந்த புதிய துறையை அமைக்க எந்த நடவ்டிக்கையும் எடுக்காத பல்கலைக்கழகம், பல புதிய துறைகளை தொடங்கியுள்ளது.
அம்பேத்கர் படிப்புகள் துறையை தொடங்க கோரி மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனது விண்ணப்பங்களை பரிசீலித்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் படிப்புகள் துறையை தொடங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.