நடிகர் விமல் ரூ.1.50 கோடி மோசடி : பட வினியோகஸ்தர் போலீசில் புகார்
சென்னை : படம் தயாரிப்பு தொடர்பாக நடிகர் விமல் 1.50 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக கூறி சிங்கார வடிவேலன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கார வடிவேலன், 45; பட வினியோகஸ்தர். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: நான், 'மெரினா பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் படங்களை வினியோகம் செய்து வருகிறேன். நடிகர் விமல், 2016ல் அறிமுகமானார். இவர் நடித்த இஷ்டம், புலி வால், மாப்பிள்ளை சிங்கம் என பல படங்கள் தோல்வியடைந்தன. இதனால், 'மார்க்கெட்' இழந்தார். அப்போது, திருப்பூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் வாயிலாக, மன்னர் வகையறா என்ற படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு பண உதவி செய்யுமாறும், விமல் கூறினார். என் நண்பரும், தயாரிப்பாளருமான கோபியிடம், 5 கோடி ரூபாய் வாங்கி கொடுத்தேன்.
|
இந்நிலையில், 2017 அக்டோபர் 13ல், விமல் என்னை சந்தித்தார். அப்போது, களவாணி – 2 என்ற படத்தை தயாரிக்க உள்ளேன். இந்த படத்தை சற்குணம் இயக்குகிறார். 'படத்தின் வினியோக உரிமையை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள். குறுகிய காலத்தில் படத்தை எடுத்து தந்து விடுகிறோம். தயாரிப்பு செலவுக்கு முன்பணமாக, 1.50 கோடி ரூபாய் தாருங்கள்' என, கேட்டார்; நானும் கொடுத்தேன். ஆனால், பட தயாரிப்பு பணிகளை துவங்கவில்லை. ஒரு கட்டத்தில், 'களவாணி – 2 படத்தை, இயக்குனர் சற்குணமே தயாரிக்கிறார்.
நான் உங்களிடம் வாங்கிய பணத்தை, இந்த படத்தின் வெளியீடுக்கு முன் கொடுத்து விடுகிறேன்' என்றார்; அதன்படி செய்யவில்லை. என் நிறுவனத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளர் வாயிலாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்; தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்தேன். அதன்பின், ஒரு அரசியல் பிரபலத்தை அணுகி, எனக்கு தர வேண்டிய பணத்தை 'செட்டில்' செய்து விடுவதாக, விமல் தெரிவித்தார். நானும் சம்மதம் தெரிவித்து, இருவரும் ஆவணத்தில் கையெழுத்திட்டோம். இச்சம்பவம் நடந்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், விமல் என்னிடம் வாங்கிய, 1.50 கோடி ரூபாயை தராமல் மோசடி செய்து விட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.