கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள முள்ளுவிளை கிராமத்தில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் கடந்த 17.4.22 ம் தேதி அகில பாரத இந்து மகாசபா மாநில தலைவர் தா.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார். பின்னர், புதுக்கடை பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள துணிக்கடை மாடியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தா.பாலசுப்பிரமணியன், “இந்துக்களை பாதுகாப்பது நமது கடமை. கேரளாவுல ஒருத்தனை வெட்டினா அவன் திருப்பி இன்னொருத்தன வெட்டுவான். தமிழ்நாட்டில அப்பிடி இருக்கக்கூடாது. நம்மாளு ஒருத்தன் போனா, அங்க பத்துபேரு போனும். அடியாத மாடு பணியாது, அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான். பலம் உள்ளவர்கள் நம்முடைய மக்களை பாதுகாக்கணும். கலியுகத்தில பயம்கிறது என்ன. சண்ட போடுறது இல்ல.
இஸ்லாமியர்களையோ, கிறிஸ்தவர்களையோ வெறுக்கணும்கிறது நம்முடைய நோக்கம் இல்லை. அவர்கள் நம்மை தாக்காத வண்ணம் பாதுகாத்துக்கொள்வது நம்முடைய வேலை. நாம அவன்கிட்ட சண்டைக்கு போகக்கூடாது. நம்மள பார்த்தாலே, இந்த கூட்டம் மேல கைவைக்கக்கூடாது, இது சாதாரண கூட்டம் இல்ல. தொட்டா தூக்கிருவாங்கன்னு தோண்ணும்” என பேசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனையடுத்து நாட்டில் அமைதியை சீர்குலைத்து மத கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய அகில பாரத இந்து மகாசபா மாநில தலைவர் தா.பாலசுப்ரமணியம் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க புதுக்கடை காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரத்தினதாஸ் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் தா.பாலசுப்பிரமணியம் மீது 126/22 u/s 153(A), 505(1)(c) IPC ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த புதுக்கடை போலீஸார் அவரை இன்று அதிகாலை ஈத்தாமொழியில் உள்ள அவரின் வீட்டில் வைத்து கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட தா.பாலசுப்பிரமணியனை மருத்துவ பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த இந்து மகாசபா தொண்டர்கள் மருத்துவமனை முன் ஆர்பாட்டம் நடத்தினர். பின்னர் போலீஸார் அவரை குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் தா.பாலசுப்பிரமணியன் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.