புதுடில்லி : ‘நிடி ஆயோக்’ அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பொருளாதார நிபுணர் சுமன் பெர்ரி அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2015 ஜனவரியில் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு, நிடி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் துணைத் தலைவராக இருந்த அரவிந்த் பனகாரியா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, 2017 ஆகஸ்டில், மூத்த பொருளாதார நிபுணர் ராஜிவ் குமார் அப்பதவியை ஏற்றார்.
ராஜிவ் குமாரின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், அவர் தன் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமா ஏற்கப்பட்டு உள்ளதாகவும், 30ம் தேதி வரை அவர் அப்பதவியில் நீடிப் பார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதையடுத்து, நிடி ஆயோக் அமைப்பின் புதிய துணைத் தலைவராக பொருளாதார நிபுணர் சுமன் பெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மே 1ம் தேதி, அவர் பொறுப்பேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலும், ரிசர்வ் வங்கியின் இந்திய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலும், பெர்ரி உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement