சென்னை: “நீதிமன்றம் தங்கள் உரிமையை பாதுகாக்கும் என மக்கள் நம்புகின்றனர்” என்று திருக்குறளை மேற்கோள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 9 மாடி நிர்வாக பிரிவு கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டி, நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதி ரமணா பேசுகையில், “எல்லாருக்கும் வணக்கம்… நிகழ்ச்சியில் பங்கேற்றது ரொம்ப சந்தோஷம். முதல் முறையாக சென்னை வந்தது குறித்து மகிழ்ச்சி.
“ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய் வஃதே முறை.”
நீதிமன்றம் தங்கள் உரிமையை பாதுகாக்கும் என மக்கள் நம்புகின்றனர்.
சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர். அரசியல் சாசன வரைவுப் பணியில் எராளமான தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். அரசியல் சாசன கடமையை நிறைவேற்றுவது என்பது சுமையான பணிதான் என்றபோதும், அதைச் சிறப்பாக செய்து வருகிறோம்.
ஆக்கபூர்வமான தீர்வுகள் காணும் போது நீதிபதிகள் கண்மூடி சட்டத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது. சமூக உண்மையை உணர வேண்டும். உடனடி காப்பி, உடனடி நூடுல்ஸ் போல உடனடி நீதியையும் எதிர்பார்க்கின்றனர். அது நீதியைக் கொன்றுவிடுகிறது.
மொழி, அடையாளம் ஆகியவற்றால் பெருமை மிக்க தமிழர்கள், மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருவார்கள். விசாரணையை வழக்காடிகள் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும்.
நீதிமன்ற விசாரணைகளில் மாநில மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல் உள்ளபோதும், தற்போதைய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடுவது குறித்து விரைவில் தீர்வு காணப்படும்.
நீதித்துறை காலியிடங்களை நிரப்புவதை பொறுத்துவரை 1,104 உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில் 388 காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்குகள் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். நீதித்துறை உள்கட்டமைப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக முதல்வருக்கு வாழ்த்து. வழக்கறிஞர்கள் நலனுக்காக பாடுபடுவதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீதிபதி பதவிக்கு வர ஆண் – பெண், இடம், இனம், மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்கக் கூடாது.
உச்ச நீதிமன்றத்தின் கிளையை துவங்குவது குறித்து திமுக எம்.பி.வில்சன் மாநிலங்களவையில் தனிநபர் மசோதா அறிமுகம் செய்துள்ளார். அதன் மீது மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது எனத் தெரியவில்லை என்றபோதும், உச்ச நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் எளிதில் அணுக ஏதுவாக காணொலி காட்சி மூலம் வழக்குகளை தொடர்ந்து விசாரிப்பது என சக நீதிபதிகளுடன் கலந்து பேசி முடிவெடுத்துள்ளோம்” என்று பேசினார்.