நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர், மார்க்ரெட் கிரேஸி. 29 வயது நிரம்பிய இவர், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர். நேர்மையாகப் பணியாற்றி உயரதிகாரிகளின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கினார்.
சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பழவூர் கிராமத்தில் உள்ள கோயில் கொடைவிழா நேற்றிரவு நடந்தது. அதில், மார்க்ரெட் கிரேஸி பாதுகாப்புப் பணியில் இருந்தார். கோயிலில் நள்ளிரவு பூஜை முடிந்த பிறகு சற்று ஓய்வாக சக போலீஸாருடன் அவர் அமர்ந்திருந்தார்.
சப்-இன்ஸ்பெக்டருக்கு பின்புறமாக வந்த அருகன்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கிரேஸி கழுத்தை அறுத்தார். பதறியடித்து எழுந்த சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் கிரேஸி, ரத்த வெள்ளத்தில் இருந்ததும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கத்தியுடன் அங்கிருந்து தப்ப முயன்ற ஆறுமுகத்தை அங்கிருந்த போலீஸார், பொதுமக்களின் துணையுடன் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் கிரேஸி, மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ஆறுமுகத்துக்கு அபராதம் விதித்துள்ளார்.
கோயில் கொடை விழாவுக்கு மது போதையில் வந்திருந்த ஆறுமுகம், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மார்க்ரெட் கிரேஸியைப் பார்த்ததும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அதனால் தனக்கு அபராதம் விதித்த அவரைக் கொலை செய்யக் காத்திருந்த கழுத்தை அறுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கழுத்து அறுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் கிரேஸிக்கு 10 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்டு வருகிறது. அவருக்கு வெளிநாட்டில் பணியாற்றும் ஒருவருடன் வரும் ஜூலை மாதம் திருமணம் நடக்க நிச்சயமாகியிருந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்திருப்பதால் குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் கழுத்து அறுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.